
சமீபமாய் அவள் நினைவு என்னை அதிகமாய் வாட்டியெடுக்கிறது.
அவளை மறக்க முடியும்,மறந்து விட்டேன் என்றுதான் இதுவரை நம்பியிருந்தேன்.
ஏனென்றால் அவளைக் காதலித்த வரை நான் சுகப்படவில்லை.
என் காதல் தோல்விக்குப் பிறகு...
வாழ்க்கையே இருளாகிப் போனது போல் உணர்ந்தேன்.
எதிர்காலம் எனக்கு Power Off செய்யப்பட்ட Monitor திரை போல, Blank ஆகிப் போனது.
சிங்கம், புலிக்காட்டில், தன்னந்தனியே, அகப்பட்டுக்கொண்ட சிறு குழந்தை போல, தவித்துப் போனேன்.
அவளைக் காதலித்த வரை, திரைப் பட இசையமைப்பாளனாவது என் இலட்சியமாயிருந்தது.
அயராத முயற்சிகளில் தொடர் தோல்விகள்.
என் இயலாமையை ஈடுகட்ட, சோறு போட்ட நிலங்களை விற்று, துணிச்சலாய் செய்த செலவெல்லாம் வீண் என்பதை, என்னாலும் என் உறவுகளாலும் ஜீரணிக்க முடியவில்லை.
பாம்புப் பிடுங்கலான வார்தைகளைத் தாங்க முடியாமல், ஒரு சமயத்தில்...,
என் கோபத்தை யார்மீது காட்டுவதென்று குழப்பத்தில், விரக்தியின் உச்சபட்ச வெறுப்பில்...
ஆம்..! பெற்ற குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொல்லும் ஈவிரக்கமற்றத் தாய்போல,
என் இசைத்துறைக் க்ண்டுபிடிப்புக்களை நானே...,
இந்தக் கைகளினால் உடைத்தெறிந்த கொலைகார பாவியானேன். (உடைத்தெறியப்பட்ட துண்டுகள், இப்போதும் மனக்கண்ணில் இரத்தம் வழியத் துடிப்பதாய் உணர்கிறேன்)
அதே ஆத்திரத்துடன்.... அவளுடன் 10 வருடங்களுக்கு மேலாய் உறவாடத் துணையாயிருந்த, என் Yamaha PSR-195 கீபோர்டைத் தூக்கினேன் உடைதெறிய.
ஏனோ அழுகை அழுகையாய் வந்தது.
மெல்லத் தடவிக் கொடுத்து...
அந்தக் கறுப்பு வெள்ளைக் கட்டைகளின் மீது முகத்தை இப்படியும் அப்படியும் ஈஷியபடி சற்று நேரம் அழுதேன்.
மெதுவாக நகர்த்தி அப்புறம் வைத்தவன்தான்.
அதற்கப்புறம்....
பாடுவது கூட மறந்து போனது.
எப்போதாவது... இன்னும் அவள் மீது ஆசை இருக்கிறதாவென பரிசோதித்துப் பார்க்க வேண்டி, கீபோர்டைத் தொட்டு வாசித்துப் பார்ப்பேன்.
மீண்டும் சிறிது நேரம் அவளுக்குள் முழுமையாய் மூழ்கிப் போய்,
ஆனாலும் அவள் மீது விருப்பமில்லாதவனைப்போல...
என்னையே ஏமாற்றிக் கொள்வேன்.
ஒரு கட்டத்தில் இப்படி ஏமாற்றிக் கொள்வதும் பிடிக்காமல்...
இசை நாட்டமுள்ள ஒரு நண்பனிடம்.....
கீபோர்டைக் கொடுத்தனுப்பி விட்டேன்.
வருடங்கள் உருண்டோடிவிட்டது.
மனக்காயங்களும் ஆறத் துவங்கியுள்ளது.
கம்ப்யூட்டர் கிடைத்து...
அதன் மூலம் சுய சம்பாத்தியத்திற்கான.....
வெளிச்ச்க் கீற்று தோற்றம் காட்டத் துவங்கியுள்ளது.
இணையம் மூலம் என் எழுத்தாளக் கனவும் நனவாகியுள்ளது.
திடீரென்று...
வாழ்க்கை...
Laptop-ன் LCD ஸ்க்ரீனில் தெரியும் வண்ண வண்ண...
இயற்கை காட்சிகளுடன் மிக அழகாகத் தோன்றுகிறது.
அழகிய வாசங்களை... மனம் நுகர ஆரம்பித்துள்ளது.
நினைத்துப் பார்க்க முடியாத பல கனவுகள், இயல்பாய் நனவாகத் துவங்கியுள்ளன.
இறை நம்பிக்கையுடனான, சுய நம்பிக்கையும்..., அதன் முயற்சிகளின் விளைவுகளும்...
முழு வீச்சில், வினை புரியத் துவங்கியுள்ளன.
இப்போது பார்த்து அவள் மீதான என் காதல் மறு ஜென்மமெடுத்தாற்ப்போல் , வெகுவாய் என்னை வதைக்கிறது.
எனக்குப் பிடித்தப் பாடல்களை மீண்டும் கேட்க்த் துவங்கியுள்ளேன்.
அட...! சமயத்தில் பாடக் கூட செய்கிறேன்.
கனவுகளில் கூட அவள் வந்து... என்னை வியர்த்து விறுவிறுத்து எழச்செய்கிறாள்.
மீண்டும் கீபோர்டில் விளையாடி, சுயநலமற்று...
அவளுடன் கலந்து கரைந்து போக மாட்டேனாவென்று.... மனமும் விரல்களும்... ஏங்கியழுகின்றன.
அவளை உண்மையாய்க் காதலிப்பவர்களைத் துன்பத்திலாழ்த்தி, பிறகு மெல்ல அணைத்து ஆறுதலளிப்பதுதான் அவளுக்கு கைவந்த கலையாயிற்றே?
நண்பனிடம் கொடுத்த கீபோர்டை அவனே திருப்பித் தந்தாலும்...,
கொடுத்த பொருளைத் திரும்பப் பெறுவது மகாபாவம் என்பதில் உறுதியாயிருக்கிறேன்.
உண்பதைக் குறைத்துக் கொண்டேனும்... சேமித்து PITCH BENDER வசதியுடன் கூடிய ஒரு புதிய கீபோர்ட் வாங்கத் துடிக்கிறேன்.
அப்படிப் பார்த்தாலும்... அதற்குப் பணம் சேர்க்கப் பல காலமாகும், என்கிற உண்மை உறைத்து விரக்திச் சிரிப்பு மிஞ்சுகிறது.
நிறைய சம்பாதிக்க வேண்டும்.
என் காதலியுடன் இணைய வேண்டும்.
ஆமாம்...?
நாங்கள் எப்போது பிரிந்தோம்....
இப்போது இணைவதற்கு...?
அவள்தான் என் குரல் நாண்களில் கூட கலந்திருக்கிறாளே.
பிறகென்ன?
எப்போதோ படித்த ஒரு பொன்மொழி நினவுக்கு வருகிறது.
உன்னிடம் உள்ள அனைத்துமே தொலைந்து போய் விட்டாலும்...
நாளை என்ற ஒன்று நிச்சயமாய் இருக்கிறது.
அதில்...
எத்தகைய அற்புதங்கள் வேண்டுமானாலும் நிகழலாம்...!