
கடந்த 3 மாதமாகவே மனதுக்குள் தாங்க முடியாத தவிப்பு.
சொந்த ஊருக்குப் போகணும். எல்லாரையும் ஒருதரம் பார்த்துடணும்.
கடைசியாய் அம்மா இறப்புக்கு சென்றது.
மனதின் விருப்பம் நிறைவேறியது.
நட்புக்கள் எவரிடமும் ஒரு வார்த்தை சொல்லவில்லை.
11 வயது வரை ஓடியாடி புரண்ட மண்.
24 வயது வரை வளர்ந்த மண்.
பல வருடங்கள் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்து...
அழுதிருந்த அதே...
கூரை வீட்டுத் திண்ணையில் மீண்டும் 1 வாரகால வாசம்.
உணர்வற்று செயலிழந்த என் கால்களை கடித்து உண்ட எறும்புகள், பழைய எறும்புகளின் சொந்தமோ?
1996-லிருந்தான சென்னை வாழ்க்கையினூடே எப்போதேனும் போய்வர சந்தர்ப்பம் கிடைத்துப் போன போதெல்லாம் இடது திண்ணையில் அப்பாவும், வலது திண்ணையில் அம்மாவும் படுத்திருப்பார்கள்.
"ராஜா... சின்னதொரே! சாப்பிட்டியா?"
அந்த அன்புக் குரல்கள் கேட்கவில்லை.
வெறும் திண்ணைகள் முகத்திலறைந்தன.
சிரமப்பட்டு....
தேற்றிக்கொண்டு...
பச்சை பசும் வயல் வெளிகளைக் கொஞ்சிவிட்டு.
சில முக்கிய நட்ப்புக்களை மட்டும் பார்த்து அளவளாவி விட்டு...
புறப்பட்டுவீட்டேன்.
வழக்கமாக புறப்படுகையில் அப்பா எழுந்து வந்து நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து ஆசீர்வதித்து அனுப்பி வைப்பார்.
இந்த முறை அண்ணன் ஆசீருடன்.
அப்பா எப்படி செய்வாரோ அதே போல... அண்ணனும்!
கண்கள் குளமாக...
வாடகைக் கார் நகர்கிறது.
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி...
போய் வருகிறேன் என் மண்ணே..!
உயிரோடிருந்தால் மீண்டும் சந்திக்கிறேன்.
நிலையாமைதானே நிலையானது.
கீழ் வயிற்றில்... 4 மாதமாக உள்ளுக்குள் வலித்துக் கொண்டிருக்கும் கட்டி... இப்போது உயிர் போகுமளவு வலிக்கிறது.