GIVE & RECEIVE FULL

Custom Search
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts

Monday, February 15, 2010

'அங்கிள்- வைரஸ்'/ 'ஆண்- ட்ரைவ்'/ 'அங்கிள்- பயாட்டிக்'.

ஏழெட்டு வருஷம் முன்னாடி, சொந்த ஊருக்குப் போயிருந்தப்ப ரொம்ப உடம்பு சரியில்லாம ஆகி, ஆஸ்பத்திரி போக முடியாததால, வீட்டுக்கே ஒரு நர்ஸைக் கூட்டி வந்தாங்க... ஊசி போட.

அவங்களும் பொறுப்பா..., "சார்! டெரிஃபிலின் இருக்கு போட்டு விடறேன்."

மண்டையை ஆட்டினேன்.

"டெக்ஸா கைவசம் இல்ல."

ஓகே. மீண்டும் மண்டையாட்டல்.

"வேற ஆன்டி- பயாட்டிக் என்ன யூஸ் பண்ணுவீங்க."

பதில சொல்லிவிட்டு....

ரொம்ப அப்பாவியாய்க் கேட்டேன்.

ஆமா? ஆன்டி-பயாட்டிக்கிற்கு ஆப்போஸிட் என்ன தெரியுங்களா?

ரொம்ப நெத்தி சுருக்கி யோசிச்சுட்டு, "இல்ல தெரியலீங்களே?"

மகா சீரியஸ்ஸாய்.... "அங்கிள்- பயாட்டிக்" என்றேன்.

அவங்க பார்த்த பார்வையில "டேய்! உன்னையெல்லம் ஊசி போட்டே சாவடிக்கணும்டா!" என்கிற அனல் அடித்தது



=================================================

இப்பிடி மாத்தி யோசிக்கிற புத்தி எப்பவுமே உண்டுங்கோ!

சமீபத்துல அண்ணன் மகன் சேவியர் வந்திருந்த போது கேட்டான்.

"எப்பாவ்! நல்லதா ஆன்ட்டி- வைரஸ் இருந்தா குடுப்பா"

"ம்ம்ம்! என் லேப்- டாப்பில மை- கம்ப்யூட்டர் ஓப்பன் பண்ணு"

"சரி!"

"ஈ ட்ரைவ் ஓப்பன் பண்ணு. உள்ள சாஃப்ட்வேர்ஸ்-ன்னு ஒரு ஃபோல்டர் இருக்கும்."

"சரி"

"அதுக்குள்ளாற அங்கிள்- வைரஸ்-னு ஒரு ஃபோல்டர் இருக்கும். உள்ள ஏ-வி-ஜி இருக்கும்... காப்பி பண்ணிக்க!"

"என்னதூ அங்கிள்- வைரஸ்-ஸா?"

"ஆமாடா! எத்தினி நாளைக்குத்தான் ஆன்டி-வைரஸ்- ம்பீங்க? போரடிக்கல? சரி! ஆண்- ட்ரைவ் வச்சிருக்கியா...? காப்பி பண்ணிக்க."



அவன் வில்லனுக்கு வில்லன்.
ஒரு மாதிரி முறைச்சிட்டே.... பாக்கெட்டில் இருந்து பென் ட்ரைவை எடுத்துக் காட்டிக் கொண்டே "சரிப்பா... Tea பண்ணிக்கறேன். எனக்குக் காப்பி பிடிக்காதுல்ல!"



=================================================

இம்மாதிரி மகா மட்டமான மொக்கைகளையும் தாண்டி மாற்றி யோசிப்பது குறித்து முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன்.

நேரமிருந்தால் அதையும் ஒரு பார்வை பாத்துடுங்க.

சுட்டி இதோ:.........

http://mindpower1983.blogspot.com/2009/03/blog-post.html

Button Comment





.

Sunday, September 20, 2009

இருப்பவற்றுக்காக சந்தோஷப் படுகிறேன்.

MySpace Graphics

வாழ்வின் ஜீவாதாரமாக நான் எண்ணியிருந்த ஒரு ஜீவனின் இழப்பு காரணமாக...

என் சமீப இடுகைகளில்...
சற்று அதிகப்படியான சோகம் வழிந்திருக்கலாம்.

எத்தனை இழப்பாயினும் வாழ்ந்துதானே ஆக வேண்டும்... எனும் தெளிவு பெறச் சற்று நேரம் பிடிக்கத்தான் செய்தது.

என்னதான் பாசிட்டிவ் அந்தோணிமுத்து என மார்தட்டிக் கொண்டாலும்,
மானுட பிறவிகளுக்கே உரித்தான பலகீனத்தைத் தவிர்க்க முடியவில்லை...

அன்பான நட்புக்களின் இடைவிடாத ஆறுதலினாலும், அறிவுறுத்தல்களினாலும்...
இப்போது முழுமையாக மீண்டு வந்து விட்டேன்.

இதற்கு முழுமையாக உதவியவர்கள்...
என் வாழ்வின் வழிகாட்டி என நான் அழைக்கும், ஜெய்ப்பூர் வாழ் தலைமை ஆசிரியை அருணா அவர்கள்.

அவர்களுக்கு என் இதய பூர்வமான நன்றிகள்.

இழப்பு குறித்தான சுய இரக்கம் தேவையற்றது.

போனவை போகட்டும்.

மீதமிருக்கும் என் புதையல்களை, பொக்கிஷங்களை...
எண்ணத் துவங்கியிருக்கிறேன்.

இவற்றை எனக்குக் கொடுத்த எல்லாம் வல்ல இறைக்கு நன்றி.

Thursday, September 17, 2009

ஒரு தெரு நாயின் பிரார்த்தனை..!



அம்மா அப்பா ஆருமில்ல..!

அவங்களுமில்ல இவங்களுமில்ல..!

அன்பு காட்ட ஆரிருக்கா..?

ஆண்டவா ஒன்னத் தவிர..!

அல்லாரும் உட்ட மாதிரி...

நீயும் கை உட்டுப் போயிடாதே..!

Wednesday, September 16, 2009

நொண்டிப் பொம்மை..!



நேற்றுத் தெருவோரம்...
குப்பைகளோடு...

காலிழந்து...
தலையில்லாமல்...
கேட்பாரற்று கிடந்தது...

ஏதேனும் ஒரு குழந்தை அதை...
கொஞ்சிக் கொஞ்சி விளையாடி...

"என்னுது..!
யாரும் தொடக்கூடாதூ..!"

எனக் குளிப்பாட்டி...
பவுடர் பூசி...
பொட்டு வைத்து...
அழகு பார்த்து...

இன்று வளர்ந்து விட்டதால்...
பள்ளி செல்லத் தொடங்கியதால்...
நண்பர்கள் கிடைத்து விட்டதால்...
அல்லது...
பொம்மை பழமையானாதால்...
அப்பா அம்மா திட்டியதால்...
அங்கஹீனம் பிடிக்காததால்...

தூக்கி எறிந்து விட்டிருக்கலாம்.

சட்டென்று நினைவு வர...
இல்லாத என் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு...
மௌனமாய்...
நகர ஆரம்பித்தேன்..!

Monday, August 31, 2009

எங்கு செல்வதென்று புரியவில்லை..?

கூண்டு திறந்தது..!

தாய்ப் பறவை பறந்தது..!

இனி அது திரும்பி வரப்போவதில்லை..!

குஞ்சு அழுதது.

அம்மா...
பறக்க முடியாத என்னையும்...
உன்னோடு எடுத்துப் போயிருக்கக் கூடாதா?

நீயில்லாத இந்தக் கூண்டில்..
உனக்கிணையாய் என் மீது அன்பு காட்ட எவருண்டு..?

நீயும் கைவிட்டாய்.
நம்பியவர் கைவிட்டார்.

என்ன செய்வதென்று புரியவில்லை..?

எங்கு செல்வதென்று புரியவில்லை..?

[Valid Atom 1.0]

Thursday, July 9, 2009

மழையும்... முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது!

Alone in the rain

மழையில் நனனைந்தபடி...
வெடித்துக் கிளம்பும்...
என் ஓங்காரச் சிரிப்பில்...
எல்லோருக்கும்... என் சந்தோஷமும்...
சுயநம்பிக்கையும்... தெரிகிறதாம்.

ரகசியமாய் அழும்... என் கண்ணீரையும்...
கூடவே... உன் நினைவுகளையும்... வெளித்தெரியாமல்..
கரைத்துக் கொண்டு போகாதா... பாழும் மழை...?
எனும் என் ஏக்கம்... எவருக்குத் தெரியும்...!
மழையும்... முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது!

Wednesday, June 10, 2009

அம்மா...!



வைகையில ஊர் முழுக...
வல்லூறும் சேர்ந்தழுக...

கைப்பிடியா கூட்டி வந்து...
கரை சேர்த்து விட்டவளே...!

எனக்கொண்ணு ஆயிருந்தா...
உனக்கு வேறு பிள்ளையுண்டு...!

உனக்கொண்ணு ஆயிருச்சே...
எனக்கு வேறு தாயிருக்கா...?








(நன்றி: வைரமுத்துவின் "ஆயிரந்தான்கவி சொன்னேன்,கவிதையிலிருந்து")



[Valid Atom 1.0]

Monday, March 23, 2009

உங்களுக்கும் இது போல ஆகியிருக்கா பாஸ்...?



சமீபத்தில் என் இரும்புக் குதிரையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு நண்பனைப் பார்க்கப் போனேன்.

அவன் கடை மெயின் ரோட்டிலேயே இருப்பதால்... ரோட்டைக் கிராஸ் பண்ணிப் போக வேண்டிய நிலை.

சர்ர்ர்ர்ர்...! புர்ர்ர்ர்ர்...! என்று ஒரே வாகன சந்தடி...

நான் எப்பவும் ரோடு என்று வந்தாலே... சர்வ ஜாக்கிரதையாகத்தான் என் வீல்சேரை கையாளுவேன்.

சாலையின் இரு புறமும் சற்று நேரம் கவனித்துவிட்டு...

வாகனங்கள் வராத சின்ன கேப்பில்....
சர்ரென்று என் குதிரையை செலுத்தினேன்.

பாதி ரோடு கிராஸ் பண்ணியிருப்பேன்.

அப்பத்தான் அது நடந்தது.

(சரிடா..! பில்டப் போதும்டா...! மேட்டருக்கு வா..!)

என் பாக்கெட்டில் செல்ஃபோன் கத்த ஆரம்பிச்சுது.

செம்ம டென்ஷன்..! இந்நேரத்துல யாரு..?

சரி மொதல்ல ரோட்டை கிராஸ் பண்ணுவோம்.

அப்புறமா யாருன்னு பாப்போம்-ன்னு எப்பிடியோ கிராஸ் பண்ணி முடிச்சுட்டு ஒரு பாதுகாப்பான இடத்துல நிறுத்திட்டு...

ம்ஹ்ம் அப்பவும் செல் சத்தம் ஓயலை.

அவசரமா எடுத்துப் பாத்தா,...

எதோ ஒரு செல் நம்பர்தான் டிஸ்ப்ளே ஆகுது..!

யாராயிருக்கும்...? ஒரு வேளை முதலாளியோ..?

இல்லாட்டி வேறு யாராவது முக்கியமான விஷயமாய் அழைப்பார்களோ?

சரி... பாப்போம்- என்று ஆன் பண்ணி காதில் வைத்து "ஹலோ" என்றேன்.

(நான் ரோட்டை கிராஸ் பண்ணது, செல் அடிச்சது... சிந்தனை, எடுத்து பேசினது வரை எல்லாமே 45 வினாடி சமாச்சாரமுங்க..!)

எதிர் முனையில வந்தக் குரலை கேட்டுட்டு.... வந்துச்சு பாருங்க எரிச்சல்.

"உங்களுக்கு இந்த் சேவை வேண்டுமா..? எண் 5- ஐ அழுத்துங்க. அந்த சேவை வேணுமா எண் 6- ஐ அழுத்துங்க?"

எனக்கு வந்த கோபத்துக்கு செல்போன் கம்பெனிக்காரன் மட்டும் எதிர்ல மாட்டியிருந்தான்னா...
கொரவளைய கடிச்சுத் துப்பியிருப்பேன். (சும்மா பேச்சுக்குத்தாங்க...! நிஜமாவே கால்ல விழுந்து கெஞ்சியிருப்பேன். எதுக்கு வம்பு?)

இந்த அனுபவம் அப்ப மட்டும்தான்-னு இல்லைங்க.

என்னிடம் ஏர்செல், ரிலையன்ஸ் என்று 2 எண்கள் உண்டு.

சமயத்துல ரொம்ப அதி முக்கியமான வேலையில் இருப்போம்.

ரொம்ப முக்கியமா யாருக்கிட்டயாவது பேசிக்கிட்டு இருப்போம்.

அப்பதான் ஒரு அனாமதேய எண்ணிலிருந்து கால் வரும்.

முன்னாடில்லாம் இது போல சிறப்புச் சலுகைகளை அறிவிக்க என்றே 5 இலக்க எண்கள் இருக்கும்.

5 இலக்க எண் என்றாலே நாம் தெரிந்து கொண்டு, தேவை இல்லைன்னா எடுக்காமலே கட் பண்ணிருவோம்.

இப்ப இதுக்குன்னே வெவ்வேறு 10 இலக்க செல்ஃபோன் எண்களிலிருந்து இம்சைகள் வந்தபடி இருக்கின்றன.

என் ரிலையன்ஸ் மொபைலில் ஒருநாளைக்கு 10-க்கு மேற்பட்ட SMS- கள். எல்லாமே அந்த ஆஃபர்... இந்த ரீசார்ஜ் ஆஃபர் என்பதாகத்தான் இருக்கும்.

இதுகளை எரேஸ் பண்றதுக்குள மண்டை காய்ஞ்சிடும்.

ஏனுங்க பாஸ்..!

இந்த மாதிரி கஷ்டம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கா?

இந்த இம்சை அழைப்புகளைத் தடுக்க எந்த கன்ஸ்யூமர் கோர்ட்டும் இல்லையா?

ஒரு கம்பெனியின் சிம்கார்டு வாங்குகிறோமென்றால் இந்த இம்சைத் தலைவலிகளை பொறுத்துக் கொண்டுதான் ஆகணுமா?

நமக்குன்னு தேர்ந்தெடுக்கற உரிமை எல்லாம் இல்லையா?

சொல்லுங்க பாஸ்...? சொல்லுங்க...?

"அப்பிடியே இங்க க்ளிக் பண்ணி இந்த ரகசிய வீடியோக் காட்சியையும் கொஞ்சம் பாத்துட்டு போயிடுங்க பாஸ்...! "

[Valid Atom 1.0]

Monday, February 9, 2009

கடவுளுக்கு ஒரு கடிதம்....!



கடவுளே நீர்தான் வாழும் உயிர்களனைத்திற்கும் தந்தை.

எனவே உம்மை அப்பா என்றே அழைக்கிறேன்.

அன்புள்ள அப்பா,
இந்த பூமியிலும், அதைத் தாண்டி அண்டம்,
பேரண்டத்தை தாண்டின பெரு வெளியெங்கும்...,
ஒவ்வொரு துகளின்...,
ஒவ்வொரு அணுவினுள்ளும்...
நீர் முழுமையாக நிறைந்திருக்கிறீர் என்பதை உணர்கிறேன்.

துன்பப்படுகிறவர்களுக்கு அடைக்கலமும், ஆறுதலும், நீர் மட்டுமே.


எனது முந்தைய கடிதத்திற்கு நீர், மிகவும் அற்புதமாக பதிலளித்தீர்.

இப்போது மீண்டும் என் ஆன்மாவின் வலிகளை, வேதனைகளை,
தேவைகளை, தீர்க்கும் சந்தோஷ எதிர்பார்ப்புக்களோடு...
மீண்டும் வெகுவாய் யோசித்த பிறகு,
இதோ உமக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் முதல் தேவை.
என் அத்தனை தேவைகளிலும் இது மிக மிக முக்கியமானது.

1) நான் இந்த உலகத்திற்கு, என்னிடமிருப்பதை முழுமையாக கொடுக்க விரும்புகிறேன்.
என் இறுதி மூச்சு வரையிலும்...சாகும்போதும், நான் கொடுத்துக் கொண்டே சாக வேண்டும்.

அந்த வகையில் என்னிடம் இப்பொது அளவில்லாமல் கொட்டிக் கிடப்பது...

1)சுய நம்பிக்கை.

2)வாழ்வில் வெற்றியடைவது குறித்து கடந்த 15 வருடங்களாக நான் தேடித்தேடிப் படித்த,
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள்.

எனக்குக் கிடைத்ததை...

என்னிடம் இருப்பதை இந்த உலகத்திற்கும், சமுதாயத்துக்கும், அள்ளி அள்ளி வழங்க வேண்டும்.

மேடைகளில் மெல்லிய நகைச்சுவை இழையோடு கலந்து, எனது சுய நம்பிக்கையையும்...., நான் படித்த வாழ்க்கை வெற்றி முறைகளையும்..,
கொடுப்பதில் நான் முன்பே வெற்றி பெற்றிருக்கிறேன்.

இதை மேலும் மேலும் தொடர்ந்து...,
ஒவ்வொரு பள்ளி மேடைகளிலும்,
கல்லூரி மேடைகளிலும்,
விழா மேடைகளிலும்...,
கடல் கடந்து உலகமெங்கும் கொடுக்க விரும்புகிறேன்.



இரண்டாவது தேவை

2) எனக்கு உயிர் கொடுத்து, இந்த பூமியில் தவழ விட்டு, வளர்த்து, நான் இப்படியான பிறகு எனக்காக ஒவ்வொரு நாளும் கண்ணீர் சிந்திய என் தாய்...,

இன்று கவனிக்க யாருமற்று பல வருடங்களாய்ப் படுக்கையில்...

வயதான அண்ணன் அண்ணியோ, மற்ற சகோதரிகளோ, கவனித்துக் கொள்ள முடியாத நிலையில்,

தினமும் "இறைவா எனக்கு சீக்கிரம் மரணத்தைக் கொடு" எனக் கெஞ்சியழும் என் தாயை,

என்னருகில் வைத்து அவர்களுக்கென்று ஒரு அன்பான நர்ஸ் ஒருவரை நியமித்து,

அவர்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மகனாக என் தாய்க்கும் தந்தைக்கும், அவர்களின் அந்திமக் காலத்திலாவது,
அவர்களின் அனைத்துத் தேவைகளையும், நிறைவேற்றக் கனவு கண்டிருந்தேன்.

அந்தக் கனவின் ஒருபாதியை சிதலமாக்கிவிட்டு என் தந்தை, ஒன்றரை வருடம் முன்பு மிகுந்த துயரத்தோடு உயிர் நீத்தார்.

குறைந்த பட்சம் என் தாயின் இறுதிக் காலமாவது அமைதியுடனும், நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் செல்லவேண்டும்.

இதைச் செய்ய எனக்கு வழி காட்டும்.

மூன்றாவது தேவை.

3) பத்தடிக்கு ஐந்தடியிலான இந்த அறை இப்போது தாங்க முடியாமல் மூச்சு முட்டுகிறது.

இதுகாறும் எப்படியோ தாங்கிவிட்டேன். இனிமேலும் என் இறுதி மூச்சு வரையிலும் இங்கேயே இருக்க நான் தயார்.

ஆயினும், இங்கே நான் படும் சிரமங்களையும், துன்பங்களையும் உம்மால் அகற்ற முடியும். என் தேவை இன்னும் பெரியதாக ஒரு ஒற்றை அறை.

நான்காவது தேவை.

4) என் வாழும் தெய்வாமான, 50 வயதை எட்டும் என் அக்காவினால் முன்போல் எனக்கு சேவை செய்ய முடியவில்லை.
"இது வரையிலும் உன்னைச் சுமந்தேன்...
இனிமேல் சுமக்க எனக்குச் சக்தி இல்லையடா மகனே!" என்று என ஒவ்வொரு நாளும், அவர்கள் மனதுக்குள்ளேயே அழும் குரலை நான் தினமும் கேட்கிறேன்.

இந்த வயதிலும்..., ஒரு சிறு முகச்சுளிப்பின்றி அவர்கள் எனக்காக படும் துன்பம் என்னால் சகிக்க முடியவில்லை.

அவர்கள் தோளில் இருந்து என் சுமையை இப்போதாவது எடுத்து விடும்.

இதுவரையில் அவர்கள் என்னைச் சுமந்ததற்கு இனி காலமெல்லாம், அவர்களை என் கண்ணுக்குள் வைத்து காக்க வேண்டும்.

இந்த நிலையில் என் தேவை...
என் சக போராளிகள், வாய் ஓவியர் இளங்கோவனுக்கு இருப்பது போன்றும், என் அன்புக்குரிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ்-ற்கு இருப்பது போலவும், என்னை கவனித்துக் கொள்ளவென்று ஒரு நர்ஸ் குழு.

அப்பா....
என் முதல் தேவையைத் தவிர மற்ற அனைத்துத் தேவைகளும் நிறைவேற எனக்கு நிறைய பணம் வேண்டியிருக்கிறது.

அதை எவரிடமும் இலவசமாகப் பெற என் சுயமரியாதை ஒருநாளும் சம்மதிக்காதென்பது உமக்குத் தெரியும்.

(வேறு வழியின்றி.... இது வரையிலும் பெற்றதே இன்னமும் வலிக்கிறது. நான் பிறருக்குக் கொடுக்க நினைப்பது இந்த வலி தீர்ப்பதற்கான ஒரு சிறு வழி முறை.)

ஒரே வழி நான் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும்.

எனது இப்போதைய சம்பளமான 3500 ரூபாய்... எனது சாப்பாட்டிற்கும்,
மருத்துவச் செலவுகளுக்குமே சரியாக இருக்கிறது.

இருப்பினும் இந்த மட்டுமாவது, சுய மரியாதையுடன் நானே என் தேவைகளுக்குச் சம்பாதிக்க வழி செய்தமைக்கு உமக்கு என் கண்ணீர் கலந்த நன்றிகள்.

இது வரையிலும் என் தேவைகளைச் சந்திக்க உதவி செய்த நீர் இனிமேலும்... உதவுவீர்...
இன்னும் சம்பாதிக்க வழிகாட்டுவீர் என மிக மிக ஆழமாக உறுதியிலும் உறுதியாக நம்புகிறேன்.

என் தேவைகளை உம்மிடம் மட்டுமே கேட்க எனக்கு உரிமை இருப்பதாக நான் நம்புகிறேன்.

இதை எப்படித் தரப் போகிறீர், எந்த விதத்தில் என்னை நிறைவுறச் செய்யப் போகிறீர் என்பது எனக்குத் தெரியாது.

ஆனால்.... செய்வீர் எனபதை மட்டும் நம்புகிறேன்.

நான் உம்முடைய செல்லப் பிள்ளை எனதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டும்.

இப்படிக்கு
உம்மால் அதிகமாய் நேசிக்கப்படும் மகன்
அந்தோணி முத்து

[Valid Atom 1.0]

Monday, January 19, 2009

பூகம்பத்தாலும் காதல் நிகழும். (தினமலர்ச் செய்தி)

படங்களைப் பெரிதாக்கிப் பார்த்துவிட்டு (அ) 19-01-2009 அன்றைய தினமலரில் வெளியான இச்செய்தியைப் படித்து விட்டு மேற்கொண்டு படியுங்கள்.

Click here to Enlarge this Picture


Click here to Enlarge this Picture


Click here to Enlarge this Picture


என்ன படிச்சுட்டீங்களா?

செய்தியைப் படிக்கும் போது முதலில்... "ஐயோ அந்தப் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே..." என மனம் பதைத்தாலும்...
வேறு கோணத்தில் யோசித்துப் பார்த்தால்....

பூகம்பத்தால் அவள் அனைத்தையும் இழந்திருக்கலாம்...
ஆனால்...
அதற்குப் ப்திலாக...

இப்போது நிஜமான அன்பு...
புனிதமான காதல் கிடைத்திருக்கிறது.

அவள் இழந்தவற்றின் முன் இது ஈடாகுமா என நாம் விவாதிக்க வேண்டாம்.

எந்த ஒரு துன்பத்திலும் கடைசியில் ஒரு சந்தோஷம் நிச்சயம் உண்டு.

நேர்மறையாய்ச் சிந்தியுங்கள்..!

Think Positive.


[Valid Atom 1.0]

Tuesday, December 9, 2008

இரண்டு தவளைகளின் கதை




இரண்டு தவளைகள், தவறிப் போய் பால் இருந்த சட்டியில் விழுந்துவிட்டன.

இரண்டுமே வெளியில் வர எம்பி எம்பி குத்தித்தன.

ஐயோ... பாவம்...!

அவை எம்பும் உயரத்தை விட அந்த சட்டியின் வாய் இன்னும் 5 செ. மீ. அளவாவது உயரம்.

ஒரு தவளை நம்பிக்கையிழந்தது.

இனிமேல் நாம் வெளி உலகத்தையே பார்க்க முடியாது. இங்கேயே கிடந்து சாக வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டது.

கொஞ்சம் கொஞ்சமாய் சாவதை விட, இப்போதே செத்து விடலாம்... என்று பாலுக்குள்ளேயே மூச்சடக்கி தற்கொலை செய்து கொண்டது.

இன்னொரு தவளையோ.... தன் மீதும்... எதிர் காலத்தின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டது.

"இப்போது வேண்டுமானால் நான் வெளியில் போக முடியாமல் போகலாம்....
ஆனால் விரைவில்...
நான் இதிலிருந்து மீள்வேன்...!"

என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.

எம்பிக் குதிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

விடாமல் முயற்சி செய்து கொண்டே... (எம்பி குதித்தபடியே) இருந்தது.

கொஞ்ச நேரம் ஆனது.

இப்போது...
பாலுக்குள்ளிருந்து வெண்ணிறமாக கொழ கொழ வென்று ஏதோ வெளிப்படத்தொடங்கியது.

அது வேறொன்றிமில்லை. பாலைத் தொடர்ந்து கடைவது பொல குதித்துக் கொண்டிருந்ததால் வெளியான வெண்ணை.

இப்போது வெண்ணையெல்லாம் திரண்டு....
7 செ. மீ. உயரத்திற்கு ஒரு கட்டியாக திரண்டது.

நமது தவளை அந்த வெண்ணைத் திரளின் மேல் ஏறி அமர்ந்தது.

ஒரே "ஜம்ப்"தான்.

வெளி உலகிற்கு வந்து விட்டது.

----------------------------------------------------------------------------------

இந்தக் கதை நமக்கு உணர்த்துவது....

1. வாழ்வின் எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை இழக்கக் கூடாது.

2. விடா முயற்சி.


முன்பெல்லாம் எனக்கு நானே இப்படி சொல்லிக் கொள்வேன்.

"இன்றைக்கு வேண்டுமானால் நான் இப்படி துன்பத்தில் இருக்கலாம்.

ஆனால் என்றைக்குமே இப்படியே இருக்கப் போவதில்லை."


"நல்லா இருக்க எங்களாலேயே ஒண்ணும் முடியல... நீ என்னத்தை சாதிச்சுடப் போற!" என்று என்னிடம் சிலர் சொல்வார்கள்.

நான் சொல்வேன்....

"இப்ப வேணா நான் தோத்துப் போகலாம்... ஆனா எப்பவுமே தோற்க மாட்டேன்.
ஆகட்டுமே... எவ்வளவு காலம்தான் ஆகட்டுமே?


உயிர் பிரியும்... அந்த வினாடி வரையிலும்... நான் நம்பிக்கையோடேயே இருப்பேன்.

அட! 10 வருஷம் ஆகட்டும். 20... 30... 50 வருஷம் கூட ஆகிவிட்டுப் போகிறது.

நான் எனது நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கும் வேளையில் எனக்கே தெரியாமல் என் உயிர் பிரிந்தாலும் கவலை இல்லை.

எனது நம்பிக்கையை ஒரு போதும் விட மாட்டேன்.


நம்பிக்கை! விடாமுயற்சி! காத்திருப்பு!


இதுதான் வாழ்வின் தத்துவம்.


----------------------------------------------------------------------------------
மேற்கூறிய தவளைக் கதை...
எனது பதினாறுகளில்... நான் தேடித் தேடிப் படித்த...
எனக்கு நம்பிக்கை உரமூட்டிய எனது தன்னம்பிக்கை ஆசான்...
"திரு. எம். எஸ். உதயமூர்த்தி" அவர்களின் "எண்ணங்கள்" புத்தகத்திலிருந்து....
இன்னும் பசுமையாய் நினைவில் இருந்த கதை.






[Valid Atom 1.0]

Wednesday, December 3, 2008

அன்றும் இன்றும்.............


[Valid Atom 1.0]



அன்று
என் பொழுதுகள் வெறுமெனே
சுவற்றைப் பார்த்துக்
கழிந்துகொண்டிருந்தன....
இன்று
என் பொழுதுகள்
என் வேலைகளுக்கு 24 மணி
நேரம் போதவில்லையே என
கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அன்று
என்னுடன் பேச கடவுள்
மட்டுமே தயாராயிருந்தார்.....
இன்று
என்னுடன் எப்போதும் பேச
சில அன்பு உள்ளங்கள்
தயாராகயிருக்கின்றன.....

அன்று என் தொலைபேசி
மணி அழைக்காதா என
ஏங்கிக் கொண்டிருந்தேன்....
இன்று
என் தொலைபேசி மணியொலித்துக்
கொண்டேயிருக்கிறது...
அன்புள்ளங்களின்
அன்புத் தொல்லைகள்

அன்று
என் தேவைகளுக்கும்
காசுக்காக அடுத்தவர்கள்
முகப் பார்த்திருந்தேன்...
இன்று
என் தேவைகளைக்
கவனித்துக் கொள்ளும்
அளவுக்குச் சம்பாதிக்கிறேன்

அன்று
வெளிக் காற்றைச் சுவாசிக்க
மாட்டேனா என்று தவம்
கிடந்திருக்கிறேன்.
இன்று
என் இரும்புக் குதிரையில்
சுதந்திரக் காற்றைச்
சுவாசித்துக் கொண்டே
ஊர்வலம் வருகிறேன்.....

சென்ற வருடம் இன்று (03-12-2008)
நான் ஆரம்பித்த வலைப்பூவும்
என்னை இந்த நிலைக்கு உயர்த்திய சில
காரணங்களுள் முக்கியமான ஒன்று.
கோடானு கோடி நன்றி!!!!

Monday, August 11, 2008

என் கால்களை எறும்புகள் தின்ற காட்சி..!

அன்பர்கள் மனம் வலிக்கக் கூடாதென்கிற காரணத்தால்... புகைப்படங்களை வேறிடம் மாற்றியுள்ளேன்.
கட்டாயம் பார்க்க விரும்பினால் இங்கே "க்ளிக்" செய்யவும்!


சில நாட்களுக்கு முன்னால் உணர்வில்லாத என் கால்களை எறும்புகள் தின்ற வேளையில்,
என் நண்பரின் டிஜிட்டல் கேமரா மூலம் எடுத்தக் காட்சி அது.

இது இரக்கத்தைச் சம்பாதிக்க எழுதப் படவில்லை.

என் நிலை இதுதான் என்று அனைவரோடும் பகிர்ந்து இதிலும் ஒரு நல்ல விஷயம் இருக்கிறதென்பதை புரிய வைக்கும் சிறு முயற்சி.

கழுத்துக்கு கீழ் இரு கைகளைத்தவிர எதுவுமே இயங்காத நிலை மட்டுமல்ல.

கால்களிலும் வயிற்றிலும் கத்தி பாய்ந்தாலும் என்னால் உணர முடியாது.

(எனக்கு வலிக்காது)

உடலின் இயங்கும் பகுதிகள் தவிர மற்றவற்றை..
கண்களால் பார்த்தோ..
(அ) கைகளால் தொட்டோதான் உணரமுடியும்.

இதை ஒரு விதத்தில் நான் நல்லதாகவே நினைக்கிறேன்.

ஏனென்றால் என் முதுகிலும், உட்காருமிடத்திலும், இருக்கின்ற,
உள்ளங்கையை விட அகலமான,
படுக்கைப் புண்களின் வலி மட்டும் எனக்கு உணர முடிந்திருந்தால் எப்படியெல்லாம் துடித்திருப்பேன்.

(ஒரு வருடம் முன்பு, வயதான அக்காவினால், என்னைச் சுத்தமாகப் பராமரிக்க முடியாத காரணத்தால்..,

அந்தப் புண்களிலிருந்து, மாதுளை விதை அளவு, புழுக்கள்,
ஆம்... புழுக்களேதான், எண்ணிக்கை இல்லாமல் வெளி வந்து,
பின் சில நல் மனமுடைய கன்னியாஸ்திரிகள்..
மருந்து அனுப்பி வைக்க,
புழுக்கள் நிறுத்தப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக குணமாகிக் கொண்டு வந்து,
இன்னமும் முழுமையாக,
அந்தப் புண்கள் ஆறவில்லை.)

ஆக இந்த உணர்வில்லாத நிலை, எனக்கு அந்தப் புண்களின் வலியை உணராதிருக்க உதவியிருக்கிறது.

அட...! இதிலும் இப்படி ஒரு நன்மை இருக்கிறதே என்று சந்தோஷம் கொள்கிறேன்.

24 வருடங்களுக்கு முன், சிகச்சைக்காக நான் மருத்துவமனையில் இருந்த போதிலிருந்தே எறும்புகள், என் கால்களின் தசையைத் தின்னுவது வாடிக்கை.(எனக்கு வலிக்காது)

அவை என்னிடம் வராதிருக்க, ப்ளாஸ்டிக் மூடிகளில் நீர் நிரப்பி கட்டிலின் நான்கு கால்களுக்குக் கீழே வைப்பார்கள்.

என் படுக்கையைச் சுற்றி எறும்பு சாக்பீஸினால் கோடு கிழித்து வைப்பார்கள்.

ஆனால் இதையெல்லாம் கடந்து எங்கேனும் கவனமில்லாமல் தொங்கி, தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு துணியின் வழி போதாதா என் எறும்பு நண்பர்கள் என்னிடம் வந்து போக.

கால்களில் உணர்வில்லை எனினும்..., வயதுக்குரிய வளர்ச்சி இல்லைதான் எனினும்...,
சூம்பிப் போகவில்லை.

முடியும், நகமும் சாதாரணமாய், வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கால்களில் நகம் வெட்டுகையில் ப்ளேடு கிழித்து ரத்தம் வழியும். (எனக்கு வலிக்காது)

எறும்புகள் மேல் தோலைத் தின்னுகையில், சிராய்த்தாற்போலிருக்கும் காயம்...,

எப்போதாவது...

அவை இன்னும் ஆழமாக உண்ணத் துவங்கினால், ரத்தம் வழிந்து விரல்களுக்கிடையே கொழ கொழப்பாகத் தேங்கிக், காய்ந்து...
விரல்கள் ஒன்றோடொன்றாய் ஒட்டிக்கொள்ளும்.

துணி மூடியிருக்கும் என் கால்களை ரகசியமாய் எறும்புகள் தின்ன பல நாள் தெரிந்தே அனுமதித்திருக்கிறேன்.

(எனக்கு வலிக்காது)

கொச கொசவென்று கால்களை மூடியிருக்கும் எறும்புகளிடம் பல நாள் பேசிக் கொண்டிருந்தும் இருக்கிறேன்.

"உங்களுக்கு சாப்பிட வேறு இடம் கிடைக்கவில்லையா?"

"இன்னும் கொஞ்ச நேரத்தில் அக்காவோ அல்லது வேறு யாரோ வந்து நீங்கள் புறப்பட்டு வரும் கோட்டைப் பார்த்தால் தேய்த்துக் கொன்று விடுவார்களே."

"நீங்கள் சாவதற்கென்றே புறப்பட்டு வந்தீர்களா.?"

"சரி! சரி! சீக்கிரம் சாப்பிட்டுவிட்டுப் புறப்படுங்கள்."
சொல்லிவிட்டு என் வேலயைப் பார்ப்பேன்.

(முன்பெல்லாம் ரேடியோ ரிப்பேரிங், புத்தகம் படிப்பது, என் கீபோர்டில் இசைப்பயிற்சி. இப்போது கம்ப்யூட்டர்)

எறும்புகளைத் தேய்க்க வருபர்களிடம் அவற்றைக் கொல்ல வேண்டாம் என்று கெஞ்சுவேன்.

என் கெஞ்சல் தாங்க முடியாமல், பெரும்பாலும், கால்களைத் தட்டி உதிர்த்துவிட்டு, துடைப்பத்தினால் பெருக்கித் தள்ளி விட்டு மீண்டும் சாக்பீஸ் கோடு போடுவார்கள்.

சில போதுகளில் பொறுமை இன்றி தேய்த்துக் கொன்று விடுவார்கள்.

(ஆரம்ப காலங்களில் நானும் அவற்றைத் தேய்த்துக் கொன்று கொண்டுதான் இருந்தேன். சுமார் 10 வருடங்களாய்த்தான் இந்த ஞானோதயம்.)

இப்போது அந்த எறும்புகளிடம் எவருமே காணாத, நான் மட்டுமே கண்ட அதிசயமான உண்மையைச் சொல்ல்கிறேன்.

எறும்புகளினால் உண்டான காயத்தை ஆற்ற இது நாள் வரையிலும், நான் எந்த மருந்துமே இட்டதில்லை.

எவ்வளவுதான் ரத்தம் வரக் கடித்தாலும் அந்தக் காயங்கள் ஆற அதிகபட்சம் 2 முதல் 4 நான்கு நாட்கள்தான்.

ஆச்சரியமாய் ஆறிப் போய் விடும்.

கடித்துச் சாப்பிட்டுவிட்டு அந்த்க் காயம் ஆறிப் போவதற்கான மருந்தையும் எறும்புகளே இட்டுச் செல்கின்றன என்பது என் கணிப்பு..

(எதிர்காலத்தில் ஏதேனும் ஆராய்ச்சிக் குழு இதை நிரூபிக்கக் கூடும்.)


இப்போது...

அடுக்கடுக்காய் கேள்வி கேட்க நினைப்பவர்களுக்கு...

அடிக்கடி என் மனதிற்குள் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளையே பதிலாகத் தருகிறேன்.

எறும்பு கடிப்பதால் எனக்கு....
எள்ளளவும் நஷ்டம் கிடையாது.

முதலாவது...

எனக்குத் துளி கூட வலி தெரியாது.

இரண்டாவது...

அவற்றினால் எனக்கு ஏற்படும் காயங்களுக்கு அவையே மருந்திடுவதாக நினைக்கும் என் நம்பிக்கை உண்மையோ இல்லையோ?

சில நாட்களில் அவை ஆறிவிடுகின்றன என்பது நிஜத்துக்கும் நிஜமான நிஜம்.

ஆக, எனக்கு வலியோ, நஷ்டமோ இல்லாத ஒரு விஷயத்துக்காக நான் ஏன், அந்த அப்பாவி எறும்புகளைக் கொல்ல வேண்டும்.

கைகளில் உணர்விருக்கும் இடத்தில் கடிக்க அனுமதித்ததில்லை.
அப்படிக் கடிக்கும் எறும்பைக் கைகளில்,
பூப்போல எடுத்து...
உதட்டருகில் கொண்டு போய், ஏதாவது பேசிவிட்டு,
கொஞ்சமாய் எக்கி,
என் படுக்கையைத் தாண்டி, பாதுகாப்பான தூரத்தில், விட்டு விடுவேன்.

அட...! என்னைப் பைத்தியக்காரன் என்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன்.

உணர்வுள்ள இடத்தில் கடிக்கும் கொசுவை,
அடித்துக் கொல்கிறேன்.

ஏனென்றால் அவற்றினால் வலியும், மலேரியாவும் வரும். குணப்படுத்த மருந்திட வேண்டும்.

எறும்புகளினால் வலியும் இல்லை.
மருந்திடவும் வேண்டாம்.

எறும்புகள் என் கால்களைத் தின்ன அனுமதிக்க இன்னொரு காரணமும் உண்டு.

பொதுவாக எனக்குள்..,
"என்னால் எவருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை.
நான் வாங்குவதற்கென்றே பிறந்தவன்", என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு.

தாகம் தணிக்கும், தண்ணீருக்குக் கூட பிறரை எதிர்நோக்கியிருப்பது கூட ஒரு விதத்தில், வாங்குவதுதானே?

மூச்சு விடுவது, உண்பது, அதை ஜீரணமாக்குவது....

இவற்றைத் தவிர மற்ற அனைத்திற்கும், நான் பிறரிடம் கணக்கின்றி வாங்கிக் கொண்டுதானே இருக்கிறேன்.

வாங்கிப் பார்த்தவர்களால் மட்டுமே, வாங்குவதில் உள்ள வார்த்தைகளுக்கெட்டாத, சுயமரியாதையின் வலியை உணர முடியும்.

இந்த வலியை ஒருநாள் இருநாள் அல்ல..,

25 வருடமாக அனுபவிக்கிறேன்.

எப்போது நான் இவற்றை திருப்பித் தருவேன்?

எப்போது நானும் கொடுக்கும் நிலைக்கு உயர்வேன், என்று பல இரவுகளில், கதறி அழுதிருக்கிறேன்.

இனி வரும் வரிகளை, நீங்கள் உச்சபட்ச பைத்தியக்காரத்தனமாகவே கொண்டாலும் பரவாயில்லை..!

மனிதர்களுக்கு உபயோகமில்லாத நான்...

மனிதர்களிடம் பெறுகிற நிலையிலிருக்கும் நான்...

மனிதர்களுக்குக் கொடுத்து திருப்தி அடைய முடியாத நான்....

குறைந்தபட்சம்...

இந்த எறும்புகளுக்காவது, உபயோகமாய் இருந்து விட்டுப் போகிறேன்.

இந்த எறும்புகளுக்காவது...
கொடுப்பதனால் எனக்கு எதுவுமே குறைவுபடாத...
உணர்வற்ற என் உடலின் ஒரு சிறு பகுதியை...
கொடுத்துவிட்டுப் போகிறேனே.

{ஆப்பிரிக்கக் காடுகளில் விஷ எறும்புகள் என்று ஒரு வகை இருக்கிறதாம்.
கடித்தால் பரலோகம் நிச்சயமாம்.
அவை கடித்தாலும் சந்தோஷமே.
அட... வாங்குகின்ற வலி முடிந்து போகும். :-))
(சும்மா... தமாசுங்க!)

:-)).. }

இவை விரக்தியின், எதிர்மறைச் (NEGATIVE THOUGHTS) சிந்தனைகளின் வெளிப்பாடல்ல.

வாழ்வு பற்றிய மனம் நிறைந்த கனவுகளோடும்...,

எதிர்காலம் குறித்த அசைக்க முடியாத நம்பிக்கைகளோடும்...,

நாளை அனைத்தும் நலமாகும் என்கிற,

எதிர்பார்ப்போடும்...,

என் நாட்களை நகர்த்துகிறேன்.

ஆனாலும்....

விளைவு எதுவாயினும்...

ஏற்க,

என் மனக்கதவை விசாலமாகத்
திறந்து வைத்திருக்கிறேன்.

சரி! என்னை எறும்பு கடிப்பது கிடக்கட்டும்.

இவ்வளவு நேரமும் என் கடியைத்
தாங்கினீர்களே...!!!

நிச்சயமாய்...
நீங்கள் ஞானிதான்.

:-))

[Valid Atom 1.0]

Sunday, June 29, 2008

இதுதான் காதல்(லாம்)...!



காற்றாடப் பறந்திருந்த...
காதல் பட்டாம்பூச்சிகளில்...
பெண் சொன்னது..!

ஏய்..!
ஒரு விளையாட்டு.
நாளைக் காலை,
யார் இந்தத் தாமரையின் மேல்
முதலில் வந்து உட்காருகிறோமோ...
அவர்களுக்குத்தான் அதிகக் காதல். சரியா?

சரி'யென்றது ஆண்பூச்சி.

மறுநாள் காலை...
4- மணிக்கே வந்துவிட்ட...
பெண் பட்டாம்பூச்சி...
வெகு நேரமாய்க் காத்திருந்தது.

விடியப் போகிறது.
இன்னும் அவனைக் காணவில்லையே.
இதுதான்,
அவன் என்மேல் கொண்ட
காதலின் லட்சணமோ..?

புலம்பியபடிக் காத்திருந்தது
பெண்பூச்சி.

விடிந்தது.

சூரிய ஒளிபட்டு
தாமரையின்..
இதழ் விரிந்தது.

இதழ்களின் நடுவே...,

தன் காதலுக்காக..
முன் தினம் மாலையே...
வந்தமர்ந்து...
தாமரை...
மூடிக்கொண்டதைக் கூட உணராமல்...
மூச்சு முட்டி...
செத்துப் போயிருந்தது...

அந்த ஆண் பட்டாம்பூச்சி.

பி. கு: சமீபத்தில் எனக்கு வந்தக் குறுஞ்செய்தியைக்(SMS) கதையாக்கியிருக்கிறேன்.

:-))) நீதி:- காதலிகளிடம் பந்தயம் வைக்காதீர்கள். செத்துப் போவீர்கள். :-)

:-)

:-)

:-)))))



[Valid Atom 1.0]

Friday, May 30, 2008

கர்ணன் சில காட்சிகள்...!

எந்த விவரிப்பும் தேவையின்றி, நீங்களே அனைத்தையும் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.


கீழ்க்கண்ட படக் காட்சியில் தர்ம தேவதை அழும்போது உங்கள் கண்கள் ஈரமாவது நிச்சயம்.


=============================================================================================================================
என் நெஞ்சே...
உன்னை முழுமையாக...
இறையிடம் சரண் தந்துவிட்டு
என்னை...
என் கடமையைச் செய்ய விடு!

பிறந்த அனைவருக்கும் ஒரு நாள்...
மரணம் நிச்சயம்தான்.
அந்த மரணத்தின் வினாடியிலும்...
நான் கர்ணனாக இறக்க...
அவனிடமே வரம் கேள்!

விதிக்கப் பட்டிருக்கும் நேரமோ...
வெகு வெகு குறைவு..!

முடிக்கப்பட வேண்டிய...
பணிகளோ மிக மிக...
அதிகம்..!

என்ன செய்வேன்..?
என் கர்ணா..!
இந்தத் துயர்...
உனக்கா..?
எனக்கா?

Wednesday, May 14, 2008

உங்கள் அனைவரைப் பற்றின என் கவிதை..... இணைய வானொலியில்....

Get this widget | Track details | eSnips Social DNA


என் அன்புக் கர்ணர்களே....
உங்களைப் பற்றி நான் எழுதிய...
"என் இனிய கர்ணா.." கவிதை... இன்று www.worldtamilnews.com "தமிழ்க் குரல்" இணைய வானொலியில் ஒலிபரப்பப் படுகிறது.
என் வாழ்வின் இன்னொரு கர்ணர் மதுரா ட்ராவெல்ஸ் அதிபர், 'திரு. வி. கே.டி. பாலன் ஐயா' அவர்களின் சிம்மக்குரலில்... அதைக் கேட்கும்போது...

மறைந்த என் தந்தையே...
என் எழுத்தை அங்கீகரித்துப் பாராட்டி...
அவரது சொந்தக் குரலில் வாசிப்பதைப் போல உணர்கிறேன்.

(மேற்கொண்டு எழுத கண்ணீர் மறைக்கிறது.)

பொதுவாக என் எழுத்துக்களைக் குறித்த தாழ்வு மனப்பான்மை எனக்கு உண்டு.
அது இன்றைக்கு முழுவதுமாக நீங்கி விட்டது.


என் இனிய கர்ணா... கவிதையைக் கேட்க இங்கே க்ளிக் செய்து wwww.worldtamilnews.com சென்று... அங்கே "KAVITHAI KELUNGAL" சுட்டி(LINK)யை சொடுக்குங்கள்....

கவிதை கேட்டுவிட்டு....
அங்கேயே Feedback பட்டனை...
Click செய்து...
ஒரு வரி..,
ஒரே ஒரு வரி...
(அ) வார்த்தை பதிவு செய்யுங்கள்.


[Valid Atom 1.0]

Monday, May 12, 2008

எப்படி...? (இந்தக் காதல்...?)



எப்படி...?

எப்படியோ ஆரம்பித்தது?

தென்றல் புக முடியாத இடத்தில்
புகுந்து கொண்டது போல
புகுந்தது இந்த அன்பு..!

எல்லோரிடமும் ஆரம்பிப்பதில்லை...!

பார்த்துக் கொண்டு பற்றிக் கொள்ளவில்லை...!

முகம் தெரியா இரவில் பேசித் தீர்க்கும்
அத்தனை கணங்களிலும் ஏதோ ஒன்றில்
கவர்ந்து கொண்டது காலம் என்னையும்...
காதல் உன்னையும்.....!

என்னிடம் ஏழு வண்ண குணங்கள்.

உன்னிடம் ஏழு வண்ண குணங்கள்.

எப்படி உதித்தது அந்தப் பல்லாயிரம்
கோடி வண்ண வானவில்...?

இதிலும் உண்டு கசக்கும் நினைவுகள்...!

உன்னிடம் பேசமுடியாத போதும்...,

உன்னைப் பார்க்க முடியாத போதும்...,

அந்தக் கசப்பான மருந்தைக் குடித்து
உன்னை வெறுக்க முயல்வதுண்டு...!

அது கொஞ்சம் எளிதாகத்தான் இருக்கிறது....

அந்தப் பொழுதுகளைக் கடத்துவதற்கு.....!


[Valid Atom 1.0]

Wednesday, May 7, 2008

எனது முதல் சம்பளம்.


ஏப்ரல் 30 அன்று எனது முதல் சம்பளம் ரூ. 3000-த்திற்கான செக் வந்தது.

அதற்கு 2 நாள் முன்னதாகவே பார்ப்பவர்களிடமெல்லாம்.... போன் செய்பவர்களிடமெல்லாம்.... எனக்கு சம்பளம் வரப் போகிறது என்று பினாத்த ஆரம்பித்து விட்டேன்.

செக் பார்த்தவுடன் கண்களில் அருவி வழியத் தொடங்கி விட்டது.

அட...!

நான் கூட வேலை செய்கிறேன்....!

நான் கூட சம்பளம் வாங்கி விட்டேன்....!

இந்த நினைப்பே...
கோடி யானைகளின் பலத்தைத் தந்தது.

சென்ற வருடம் இதே நாளில் அப்பாவிடம்....
"அப்பா... நான் அடுத்த மாசத்துலருந்து சம்பளம் வாங்க ஆரம்பிசிடுவம்ப்பா. அதுக்கப்புறம் உங்களுக்கு மாசா மாசம் 1000 ரூவா கண்டிப்பா தருவேன்...!"
என்று உறுதியளித்தது நினைவுக்கு வந்தது.

2007 ஜூன் 27 அன்று அப்பா எங்களை விட்டுப் போகும் நாள் வரையிலும், எல்லாரிடமும்...

"அடுத்த மாசத்திலருந்து என் சின்ன மவன் சம்பளம் வாங்குவான்... எனக்கு மாசத்துக்கு ஆயிர ரூவா குடுக்கறன்னு சொல்லியிருக்கறான்" என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இதை எழுதும் இந்த வினாடியிலும் கண்ணீர் மறைக்கிறது.

அவருடைய அடுத்த மாத நம்பிக்கை.... ஒரு வருடம் கழித்துத்தான் நிறைவேறியிருக்கிறது.

இந்த நிமிடம் வரையிலும் நான் உண்ணும் ஒவ்வொரு பருக்கையும் என் தந்தையின் உழைப்பு.

அண்ணனுக்கப்புறம் 6 பெண்களுக்குப் பிறகு... 8-வதாய் என்னைத் தவமிருந்து பெற்று சீராட்டி வளர்த்தவர்.

என் இசைத்திறன், அறிவுத்திறன்.... அனைத்துமே அவரது மரபணு தந்த வரம்.

(வீரமாமுனிவரின் 'தேம்பாவணியை' அவர் சுயமாக மெட்டுக்கட்டி வைத்திருந்தார்.)

அவரது கம்பீரக் குரலில் எந்தப் பாடலுமே கேட்கக் கேட்க இனிமை.

அவர் தன் மக்களுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் ஒரு இலக்கியம் போன்றது.

அவரிடமிருந்து நான் பெற்றவை எண்ணிலடங்கா....

நான் பெற்றதில் கொஞ்சமேனும் திருப்பித் தர ஆயிரம் கனவு கண்டிருந்தேன்.

என் மனக் காடெங்கும்...
முட்டி...
மோதி...
அலைந்துத்...
திரிந்துக்....
கதறுகிறேன்.

அப்பா....! உங்க சின்ன மவன் சம்பளம் வாங்கியுட்டம்ப்பா.

உங்களுக்குச் சேர வேண்டிய 1000 ரூவாய யார்ட்டப்பா குடுப்பன்.?

ஏம்பா என்ன விட்டுட்டுப் போனீங்க?

கண்ணீரினூடே நேரெதிர் ஷெல்ஃபில் புகைப்படத்திற்குள்ளிருந்து அப்பாவின் உருவம் ஏதோ பதில் சொல்வதாய்ப் படுகிறது.


(இப்படி ஒரு பதிவை நான் எழுதுமளவுக்கு என்னை உயர்த்திய, "மதுரா ட்ராவெல்ஸின்" அதிபர் என் வணக்கத்திற்குரிய, கலைமாமணி திரு. வி. கே. டி. பாலன் ஐயா அவர்களுக்கு என் கண்ணீர் கலந்த நன்றிகள்.)


[Valid Atom 1.0]

A Letter to God

Oh my dear God!

I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,"

1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.


I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.

LinkWithin

Related Posts with Thumbnails