
அண்ணன் என்ற வார்த்தைக்கு, எனது அகராதியில் அப்பா என்ற ஒரு மிகப் பெரிய அர்த்தமுண்டு।
நாங்கள் உடன் பிறந்தோர் ஒன்பது பேர்। மூத்தவர் அண்ணன். பெயர் லூர்துசாமி.அடுத்து ஆறு பேர் அக்கா. பிறகு நான். எனக்கடுத்து ஒரு தங்கை.
என் அண்ணனுக்குத் திருமணமாகி, அவருக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு, (பிறந்த மறு நாளே, இறந்து விட்டது.) எட்டு மாதங்கள் கழித்து பிறந்தவன் நான்.
என்னை பெற்றது மட்டுமே என் பெற்றோர். வளர்த்ததெல்லாம் அண்ணன், அண்ணி..., பெரிய அக்கா, மாமா..., மற்றுமுள்ள அக்காக்கள்தான்.
குறிப்பாக அண்ணனது குழ்ந்தை இறந்து போனதால்..., அந்த அன்பையும், பாசத்தையும்... என்னிடம் மட்டுமே செலுத்தி வளர்த்தார்கள்.
என் அண்ணன் தான் எனது முதல் குரு.
(அந்தக்காலத்து S.S.L.C முடித்தவர்)
நான் இன்றைக்கு ஏதோ கொஞ்சமாவது, அறிவுத்தெளிவுடன் இருக்கிறேன் என்றால்...,
என் அன்பு அண்ணன் அன்று...,
என்னை அடித்து அடித்து சொல்லிக்கொடுத்ததுதான்.
அவர் எனது இரண்டாவது தந்தை.
அம்மா என்ற வார்தைக்கு, நான் அர்த்தம் கண்டது என் அண்ணியிடம்தான்.நான் நடக்கத் துவங்கும் வரை, அவ்ர்களின் இடுப்பிலேயே என்னைச் சுமந்து சென்றவர்கள்.Toilet போனால் அவர்கள்தான் கழுவி விடுவார்கள்.
எனது 11-வது வயதில், இந்த விபத்து நிகழ்ந்த நாள் வரை, என் அண்ணனை கட்டியணைத்துக் கொண்டு, அவர் மீது கால் போட்டுக் கொண்டுதான் தூங்குவேன்.
நான் முதன்முத்லாக ரசித்து, நேசித்த..., முதல் 'HERO' என் அண்ணன்தான். (இப்போதும் கூட என் பேச்சில் செயல்களில், அவருடைய பாதிப்புக்கள் நிறைய இருக்கும்.)
நடிகர் சத்தியராஜின் உயரம். சுருள் சுருளாக தலை முடி. வீட்டிலிருக்கும் நேரம் தவிர, எப்போதும் Polyester வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கைச் சட்டை.
அவரது சிவப்பு நிற RAJDOOT-ல்... அவர் ஆரோகணித்து வரும் Style-ல், சத்தியமாய் அந்தக்கால எம்.ஜி.ஆர்., சிவாஜி தோற்றுப் போவார்கள்.
சிறு வயது, நினைவென்றால்...
குந்தாணிசுனை கிராமத்தில், பரந்து விரிந்து கிடக்கும் எங்களுக்குச் சொந்தமான கழனி வயல்களுக்கு நீர் பாய்ச்ச, பம்பு செட் விட, என்று என் அண்ணன் வரப்பில் நடந்து செல்லுவார்.
அவரது தோளில் நான்.
அப்போதெல்லாம் அண்ணன் ஒரு பாடலை,
அடிக்கடி பாடுவார்.
பெரியவனானதும்தான்....
அது என்ன பாடல்?
என்ன படம்॥?
அதற்கு என்ன அர்த்தம்?
என்று புரிந்தது.
"அன்பு சகோதரர்கள்" படத்தில்
"கண்டசாலா" பாடிய
"முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக,
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம், கண்ணுக்குக் கண்ணாக," பாடல் அது.
இபோதும் கூட அந்த பாடலைக் கேட்டாலே... என் கண்களில் நீர் சுரக்கத் துவங்கி விடும்.அந்தப் பாடலை எனக்காக ஒரு முறை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.
இந்தப் பாடலின் முதல் சரணத்தில்...,
"தாயாரும் படித்ததில்லை,
தந்தை முகம் பார்த்ததில்லை,
தாலாட்டு கேட்டதன்றி,
ஓர் பாட்டும் அறிந்ததில்லை.
தானாகப் படித்து வந்தான்,
தங்கமென வளர்ந்த தம்பி...!
தள்ளாத வயதினில் நான்...
வாழுகிறேன் அவனை நம்பி."
'(Sorry! இதை எழுதும்போதே அழுகை வருகிறது.)
என் அண்ணனுக்கு இபோது அறுபது வயது ஆகப் போகிறது. அவருக்கு நான்கு பிள்ளைகள்.
இருந்தாலும் அவர்களயெல்லாம் தாண்டி...,
அவரது மூத்தப் பிள்ளை நான் தான்.
அவர் என் மீது எந்த அளவு அன்பு வைத்திருந்தார் என்றால்....
விபத்தில் நான் படுக்கையில் விழுந்த உடன்...,
முழுவதுமாக உடைந்து போய் விட்டர்.
இருபத்தைந்து வருடங்களாகியும்...,
இன்னும் அதிலிருந்து மீளவில்லை.
3 comments:
ungkal annan nisamave oru hero thaan, ungalaipol..
அந்தோணி முத்து உங்கள் பற்றிய செய்தி ஆ.விகடனில் படித்தேன்.நீங்கள் ஏன் தமிழ்மணம் ,தேன் கூடு போன்ற வலை திரட்டிகளில் இணையவில்லை.தமிழ் மணத்தில் இணைந்தால் உங்கள் உலகம் மேலும் விரிவடையும்.எழுத்துக்கள் வாசிக்கப் படும்.நண்பர்கள் வட்டம் பெருகும்.உதவிகளும் கிடைக்கக் கூடும்.www.thamizmanam.com என்ற தளத்தை கிளிக்கி யாரிடமும் உதவி கோரலாம்.உங்களைப் பற்றிய செய்தியொன்றை இன்னும் சில மணி நேரத்தில் பதிவிடப் போகிறேன்.ஆட்சேபணையில்லையே. அன்பு அண்ணன்"வழ்த்துக்கள் D.mountbettan Omampuliyur
mountbettan said...
// நீங்கள் ஏன் தமிழ்மணம் ,தேன் கூடு போன்ற வலை திரட்டிகளில் இணையவில்லை.//
அன்பு அண்ணா, 2 மாதம்
முன்பே தமிழ்மணத்தில் இணைந்துவிட்டேன்.
கருவிப் பட்டை பார்க்கவில்லையா?
//உங்களைப் பற்றிய செய்தியொன்றை இன்னும் சில மணி நேரத்தில் பதிவிடப் போகிறேன்.//
மிக்க நன்றி அண்ணா.
Post a Comment