
பல முறை இந்த வாழ்க்கை என்னை சந்தோஷப் படுத்தியிருக்கிறது.
அதற்குச் சமமாக துக்கப்படுத்தியும் இருக்கிறது. (நாணயத்தின் இரு பக்கங்கள்...?)
ஒரு உண்மயை இங்கே விளம்பியாகவேண்டியது கட்டாயம்.
என்னதான் இனிய அந்தோணி என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும்... துயரமும் துன்பமும் என்னை வாட்டும்போது பலமுறை (எண்ணிக்கை நினைவில்லை) நானும், தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன்.
கொடூரமான மனவேதனைகளை அனுபவித்திருக்கிறேன்.
மனதின் வலி தாங்காமல்....
இரவுகளில் வெடித்து அழுதிருக்கிறேன்.
"இறைவா! இந்த நொடியே என்னை எடுத்துக்கொள்," என்று
புழுவாய்த் துடித்துக் கெஞ்சியிருக்கிறேன்.
என் தந்தை அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார்.
"சின்னதொரே...! ராஜா...!," "நாங்க (பெற்றோர்) இருக்கும்போதே கடவுள் உன்னை எடுத்துக்கணும்னு வேண்டிக்கடா...!"
அவர் சொல்வது எந்த அளவு சத்தியம், நிதர்சனம், என்பதை அவர் இருக்கும்போதே எனக்கு வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது.
ஊனமுற்ற தன் மகனுக்கு, உணவிடுவதைத் தவிர, உடலளவிலோ, வேறு வசதிகளோ... எதுவுமே செய்ய இயலாத ஒரு வயதான தகப்பனாக...
அவர்...
தான் அழுவதைக்கூட மறைக்கப் பார்ப்பார். (வேறு பக்கம் திரும்பிக் கொள்வார். உடல் குலுங்கும். கண்களில் மெளனமாய் வான் மழை வழிந்தோடும்.)
28-6-2007 விதி என் வாழ்வின் சூரியனை விழுங்கிய நாள்.
என் தந்தை இறைவனடி சேர்ந்தார்.
இன்னமும் அந்த அதிர்ச்சியில்... இழப்பில்... இருந்து என்னால் வெளிவர முடியவில்லை.
என்னடா இவன் இனிய அந்தோணி என்று பெயர் வைத்துக் கொண்டு, "அதிர்ஷ்டக்காரன்" என்றத் தலைப்பில்....,
இப்படி அநியாயத்துக்கு அழுதுத் தொலைக்கிறானே, என்று நீங்கள் நினைக்கலாம்.
இல்லை!
நான் என்ன தெய்வப் பிறவியா?
எதற்கும் அசைய மாட்டேன் என்று சொல்வதற்கு.
நானும் சராசரி மானுடப் பிறவிதானே...!
எத்தனை துன்பங்களைச் சந்தித்திருந்தாலும்....
இப்போது...
நான் மிக, மிக சந்தோஷமாக இருக்கிறேன்.
இயற்கை என்னும் அந்த மகா சக்தி (கடவுள்), ஒரு கதவை மூடினால், மற்றொரு கதவைத் தயாராகத் திறந்து வைத்திருக்குமாம்.
ஆம். இது நிஜம்.
என் கழுத்துக்கு கீழ் முடக்கப்பட்ட சக்தி முழுவதும்...
என் தலையில்(மூளையில்)...,
கைகளில் மாற்றப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.
(நம்புங்க.... தலைவா).
என் தந்தையை எடுத்துக் கொண்ட கடவுள், பதிலுக்கு இரு மடங்காகக் கொடுத்திருக்கிறார்.
ஆம். 'குருவாக...,'
எனக்கு நன்மைகளை அறிமுகப் படுத்திய என் "விஷி"
அண்ணன்.
http://www.azhagi.com. சென்றால் அவரைச் ச்ந்திக்கலாம். எனக்காக http://anthony.azhagi.com என்ற பெயரில் ஒரு வலை தளத்தையே... துவங்கி தனது துன்பம் தரும் உடலநிலையிலும், பக்கம் பக்கமாக என்னைப் பற்றி எழுதியிருக்க்றார்.
மீண்டும் என் 'தந்தையே' பிறந்து வந்த மாதிரி, எப்போதும் எந்நேரமும் என் நலனைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்...
சுரேஷ்" அண்ணன் சென்றால் அவரைச் சந்திக்கலாம்.
அங்கும் என்னைப் பற்றின கவலைகளைத் தான் சிந்தித்து வைத்திருப்பார்.
எனது அன்பான அண்ணன், சகோதரிகள், அவர்களின் கணவர்கள்,
இப்போது இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள்,
இப்படி என்னை ஒரு தேவலோகப் பூவைப் போல பார்த்துக்கொள்ள ஒரு தேவதைகளின் கூட்டமே இருக்கும்போது...
இப்போது சொல்லுங்கள்....
சத்தியமாய்...
நான் அதிர்ஷ்டக்காரன்தானே?
என் சுரேஷின் உணர்வுகள்...: யாரிவர்?
5 comments:
//எத்தனை துன்பங்களைச் சந்தித்திருந்தாலும்....
இப்போது...
நான் மிக, மிக சந்தோஷமாக இருக்கிறேன்.//
வேறென்ன வேண்டும்? மனசு சந்தோஷம் ஒன்றுதான் நிரந்தரம்...
"விஷி""சுரேஷ்" உங்கள் அண்ணன், சகோதரிகள், அவர்களின் கணவர்கள் இவ்வளவு பேருக்கும் உங்களுக்கு உதவி கடவுளைக் காணும் வரம் கிடைத்ததனால் அவர்கள்தான் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என நான் நினைக்கிறேன்...
அருணா
வாழ்த்துக்கள்...நீங்கள் சந்தோசமாக இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
உன்னைப் பார்த்து பொறாமைப்படுகிறேன்
அன்பின் 'அந்தோணி',
நீங்க என்றும் ஆனந்தமாகவே இருப்பீங்க நண்பா.
எனது வாழ்த்துக்கள் என்றென்றும் உங்களைத் தொடரும்.
அந்தோனி,
நிங்கள் அதிர்ஷ்டக்காரன் என்பதைவிட "Promising God" என்பதே மிக பொருந்தும்
Post a Comment