அன்பர்கள் மனம் வலிக்கக் கூடாதென்கிற காரணத்தால்... புகைப்படங்களை வேறிடம் மாற்றியுள்ளேன்.
கட்டாயம் பார்க்க விரும்பினால் இங்கே "க்ளிக்" செய்யவும்!
சில நாட்களுக்கு முன்னால் உணர்வில்லாத என் கால்களை எறும்புகள் தின்ற வேளையில்,
என் நண்பரின் டிஜிட்டல் கேமரா மூலம் எடுத்தக் காட்சி அது.
இது இரக்கத்தைச் சம்பாதிக்க எழுதப் படவில்லை.
என் நிலை இதுதான் என்று அனைவரோடும் பகிர்ந்து இதிலும் ஒரு நல்ல விஷயம் இருக்கிறதென்பதை புரிய வைக்கும் சிறு முயற்சி.
கழுத்துக்கு கீழ் இரு கைகளைத்தவிர எதுவுமே இயங்காத நிலை மட்டுமல்ல.
கால்களிலும் வயிற்றிலும் கத்தி பாய்ந்தாலும் என்னால் உணர முடியாது.
(எனக்கு வலிக்காது)
உடலின் இயங்கும் பகுதிகள் தவிர மற்றவற்றை..
கண்களால் பார்த்தோ..
(அ) கைகளால் தொட்டோதான் உணரமுடியும்.
இதை ஒரு விதத்தில் நான் நல்லதாகவே நினைக்கிறேன்.
ஏனென்றால் என் முதுகிலும், உட்காருமிடத்திலும், இருக்கின்ற,
உள்ளங்கையை விட அகலமான,
படுக்கைப் புண்களின் வலி மட்டும் எனக்கு உணர முடிந்திருந்தால் எப்படியெல்லாம் துடித்திருப்பேன்.
(ஒரு வருடம் முன்பு, வயதான அக்காவினால், என்னைச் சுத்தமாகப் பராமரிக்க முடியாத காரணத்தால்..,
அந்தப் புண்களிலிருந்து, மாதுளை விதை அளவு, புழுக்கள்,
ஆம்... புழுக்களேதான், எண்ணிக்கை இல்லாமல் வெளி வந்து,
பின் சில நல் மனமுடைய கன்னியாஸ்திரிகள்..
மருந்து அனுப்பி வைக்க,
புழுக்கள் நிறுத்தப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக குணமாகிக் கொண்டு வந்து,
இன்னமும் முழுமையாக,
அந்தப் புண்கள் ஆறவில்லை.)
ஆக இந்த உணர்வில்லாத நிலை, எனக்கு அந்தப் புண்களின் வலியை உணராதிருக்க உதவியிருக்கிறது.
அட...! இதிலும் இப்படி ஒரு நன்மை இருக்கிறதே என்று சந்தோஷம் கொள்கிறேன்.
24 வருடங்களுக்கு முன், சிகச்சைக்காக நான் மருத்துவமனையில் இருந்த போதிலிருந்தே எறும்புகள், என் கால்களின் தசையைத் தின்னுவது வாடிக்கை.(எனக்கு வலிக்காது)
அவை என்னிடம் வராதிருக்க, ப்ளாஸ்டிக் மூடிகளில் நீர் நிரப்பி கட்டிலின் நான்கு கால்களுக்குக் கீழே வைப்பார்கள்.
என் படுக்கையைச் சுற்றி எறும்பு சாக்பீஸினால் கோடு கிழித்து வைப்பார்கள்.
ஆனால் இதையெல்லாம் கடந்து எங்கேனும் கவனமில்லாமல் தொங்கி, தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு துணியின் வழி போதாதா என் எறும்பு நண்பர்கள் என்னிடம் வந்து போக.
கால்களில் உணர்வில்லை எனினும்..., வயதுக்குரிய வளர்ச்சி இல்லைதான் எனினும்...,
சூம்பிப் போகவில்லை.
முடியும், நகமும் சாதாரணமாய், வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கால்களில் நகம் வெட்டுகையில் ப்ளேடு கிழித்து ரத்தம் வழியும். (எனக்கு வலிக்காது)
எறும்புகள் மேல் தோலைத் தின்னுகையில், சிராய்த்தாற்போலிருக்கும் காயம்...,
எப்போதாவது...
அவை இன்னும் ஆழமாக உண்ணத் துவங்கினால், ரத்தம் வழிந்து விரல்களுக்கிடையே கொழ கொழப்பாகத் தேங்கிக், காய்ந்து...
விரல்கள் ஒன்றோடொன்றாய் ஒட்டிக்கொள்ளும்.
துணி மூடியிருக்கும் என் கால்களை ரகசியமாய் எறும்புகள் தின்ன பல நாள் தெரிந்தே அனுமதித்திருக்கிறேன்.
(எனக்கு வலிக்காது)
கொச கொசவென்று கால்களை மூடியிருக்கும் எறும்புகளிடம் பல நாள் பேசிக் கொண்டிருந்தும் இருக்கிறேன்.
"உங்களுக்கு சாப்பிட வேறு இடம் கிடைக்கவில்லையா?"
"இன்னும் கொஞ்ச நேரத்தில் அக்காவோ அல்லது வேறு யாரோ வந்து நீங்கள் புறப்பட்டு வரும் கோட்டைப் பார்த்தால் தேய்த்துக் கொன்று விடுவார்களே."
"நீங்கள் சாவதற்கென்றே புறப்பட்டு வந்தீர்களா.?"
"சரி! சரி! சீக்கிரம் சாப்பிட்டுவிட்டுப் புறப்படுங்கள்."
சொல்லிவிட்டு என் வேலயைப் பார்ப்பேன்.
(முன்பெல்லாம் ரேடியோ ரிப்பேரிங், புத்தகம் படிப்பது, என் கீபோர்டில் இசைப்பயிற்சி. இப்போது கம்ப்யூட்டர்)
எறும்புகளைத் தேய்க்க வருபர்களிடம் அவற்றைக் கொல்ல வேண்டாம் என்று கெஞ்சுவேன்.
என் கெஞ்சல் தாங்க முடியாமல், பெரும்பாலும், கால்களைத் தட்டி உதிர்த்துவிட்டு, துடைப்பத்தினால் பெருக்கித் தள்ளி விட்டு மீண்டும் சாக்பீஸ் கோடு போடுவார்கள்.
சில போதுகளில் பொறுமை இன்றி தேய்த்துக் கொன்று விடுவார்கள்.
(ஆரம்ப காலங்களில் நானும் அவற்றைத் தேய்த்துக் கொன்று கொண்டுதான் இருந்தேன். சுமார் 10 வருடங்களாய்த்தான் இந்த ஞானோதயம்.)
இப்போது அந்த எறும்புகளிடம் எவருமே காணாத, நான் மட்டுமே கண்ட அதிசயமான உண்மையைச் சொல்ல்கிறேன்.
எறும்புகளினால் உண்டான காயத்தை ஆற்ற இது நாள் வரையிலும், நான் எந்த மருந்துமே இட்டதில்லை.
எவ்வளவுதான் ரத்தம் வரக் கடித்தாலும் அந்தக் காயங்கள் ஆற அதிகபட்சம் 2 முதல் 4 நான்கு நாட்கள்தான்.
ஆச்சரியமாய் ஆறிப் போய் விடும்.
கடித்துச் சாப்பிட்டுவிட்டு அந்த்க் காயம் ஆறிப் போவதற்கான மருந்தையும் எறும்புகளே இட்டுச் செல்கின்றன என்பது என் கணிப்பு..
(எதிர்காலத்தில் ஏதேனும் ஆராய்ச்சிக் குழு இதை நிரூபிக்கக் கூடும்.)
இப்போது...
அடுக்கடுக்காய் கேள்வி கேட்க நினைப்பவர்களுக்கு...
அடிக்கடி என் மனதிற்குள் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளையே பதிலாகத் தருகிறேன்.
எறும்பு கடிப்பதால் எனக்கு....
எள்ளளவும் நஷ்டம் கிடையாது.
முதலாவது...
எனக்குத் துளி கூட வலி தெரியாது.
இரண்டாவது...
அவற்றினால் எனக்கு ஏற்படும் காயங்களுக்கு அவையே மருந்திடுவதாக நினைக்கும் என் நம்பிக்கை உண்மையோ இல்லையோ?
சில நாட்களில் அவை ஆறிவிடுகின்றன என்பது நிஜத்துக்கும் நிஜமான நிஜம்.
ஆக, எனக்கு வலியோ, நஷ்டமோ இல்லாத ஒரு விஷயத்துக்காக நான் ஏன், அந்த அப்பாவி எறும்புகளைக் கொல்ல வேண்டும்.
கைகளில் உணர்விருக்கும் இடத்தில் கடிக்க அனுமதித்ததில்லை.
அப்படிக் கடிக்கும் எறும்பைக் கைகளில்,
பூப்போல எடுத்து...
உதட்டருகில் கொண்டு போய், ஏதாவது பேசிவிட்டு,
கொஞ்சமாய் எக்கி,
என் படுக்கையைத் தாண்டி, பாதுகாப்பான தூரத்தில், விட்டு விடுவேன்.
அட...! என்னைப் பைத்தியக்காரன் என்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன்.
உணர்வுள்ள இடத்தில் கடிக்கும் கொசுவை,
அடித்துக் கொல்கிறேன்.
ஏனென்றால் அவற்றினால் வலியும், மலேரியாவும் வரும். குணப்படுத்த மருந்திட வேண்டும்.
எறும்புகளினால் வலியும் இல்லை.
மருந்திடவும் வேண்டாம்.
எறும்புகள் என் கால்களைத் தின்ன அனுமதிக்க இன்னொரு காரணமும் உண்டு.
பொதுவாக எனக்குள்..,
"என்னால் எவருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை.
நான் வாங்குவதற்கென்றே பிறந்தவன்", என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு.
தாகம் தணிக்கும், தண்ணீருக்குக் கூட பிறரை எதிர்நோக்கியிருப்பது கூட ஒரு விதத்தில், வாங்குவதுதானே?
மூச்சு விடுவது, உண்பது, அதை ஜீரணமாக்குவது....
இவற்றைத் தவிர மற்ற அனைத்திற்கும், நான் பிறரிடம் கணக்கின்றி வாங்கிக் கொண்டுதானே இருக்கிறேன்.
வாங்கிப் பார்த்தவர்களால் மட்டுமே, வாங்குவதில் உள்ள வார்த்தைகளுக்கெட்டாத, சுயமரியாதையின் வலியை உணர முடியும்.
இந்த வலியை ஒருநாள் இருநாள் அல்ல..,
25 வருடமாக அனுபவிக்கிறேன்.
எப்போது நான் இவற்றை திருப்பித் தருவேன்?
எப்போது நானும் கொடுக்கும் நிலைக்கு உயர்வேன், என்று பல இரவுகளில், கதறி அழுதிருக்கிறேன்.
இனி வரும் வரிகளை, நீங்கள் உச்சபட்ச பைத்தியக்காரத்தனமாகவே கொண்டாலும் பரவாயில்லை..!
மனிதர்களுக்கு உபயோகமில்லாத நான்...
மனிதர்களிடம் பெறுகிற நிலையிலிருக்கும் நான்...
மனிதர்களுக்குக் கொடுத்து திருப்தி அடைய முடியாத நான்....
குறைந்தபட்சம்...
இந்த எறும்புகளுக்காவது, உபயோகமாய் இருந்து விட்டுப் போகிறேன்.
இந்த எறும்புகளுக்காவது...
கொடுப்பதனால் எனக்கு எதுவுமே குறைவுபடாத...
உணர்வற்ற என் உடலின் ஒரு சிறு பகுதியை...
கொடுத்துவிட்டுப் போகிறேனே.
{ஆப்பிரிக்கக் காடுகளில் விஷ எறும்புகள் என்று ஒரு வகை இருக்கிறதாம்.
கடித்தால் பரலோகம் நிச்சயமாம்.
அவை கடித்தாலும் சந்தோஷமே.
அட... வாங்குகின்ற வலி முடிந்து போகும். :-))
(சும்மா... தமாசுங்க!)
:-)).. }
இவை விரக்தியின், எதிர்மறைச் (NEGATIVE THOUGHTS) சிந்தனைகளின் வெளிப்பாடல்ல.
வாழ்வு பற்றிய மனம் நிறைந்த கனவுகளோடும்...,
எதிர்காலம் குறித்த அசைக்க முடியாத நம்பிக்கைகளோடும்...,
நாளை அனைத்தும் நலமாகும் என்கிற,
எதிர்பார்ப்போடும்...,
என் நாட்களை நகர்த்துகிறேன்.
ஆனாலும்....
விளைவு எதுவாயினும்...
ஏற்க,
என் மனக்கதவை விசாலமாகத்
திறந்து வைத்திருக்கிறேன்.
சரி! என்னை எறும்பு கடிப்பது கிடக்கட்டும்.
இவ்வளவு நேரமும் என் கடியைத்
தாங்கினீர்களே...!!!
நிச்சயமாய்...
நீங்கள் ஞானிதான்.
:-))
எதையும் தெளிவாகக் கற்றுக்கொள். அதை அனுபவித்து மகிழ்.
மகிழ்ச்சியாக இரு.
நீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.
ஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்.
-ஸ்ரீ சத்ய சாய்பாபா
Subscribe to:
Post Comments (Atom)
A Letter to God
Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,"
1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,"
1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
22 comments:
hi im from ottawa, canada. Ive read your post and im so sorry abt it.
Recently i've lost my fingers at work. I was feeling really bad for depending on others to even have my meals(yes i kno the pain) and i hated my life. but after i read your post i gained much confident to overcome my disability. thanx a lot to u and wish u all the best.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
//நிச்சயமாய்...
நீங்கள் ஞானிதான்.//
அன்றாட வாழ்வில் வரும் உடல் நலக் குறைவுகளுக்கு இனி ஒரு போதும் சோர்ந்திடத் தோன்றாது இதைப் படித்தால்..என்னையும் சேர்த்துத்தான். அதை எங்களுக்கு உணர்த்திய வகையில் யார் ஞானி எனக் கூறவும் வேண்டுமா?
நிச்சயமாய்
ஞானி
நீங்கள்தான்!
அன்பு நண்பா.. ஆசையாய் கவிதைகள் தேடி வந்தேன்.. உங்கள் பதிவு வாசிக்க ஆரம்பித்தவுடன் மனம் வலிக்க ஆரம்பித்துவீட்டது.. முழுமையாக வாசிக்கவும் இயலவில்லை.. மன்னித்துக்கொள் நண்பா..
புதிய சிறகுகளுடன் மகிழ்ச்சியாய் வலம் வருவீர்கள் என நம்புகிறேன்! :)
There are thousands of Anthonys around the world. But God sent this one "Muthu" to measure the power of human compassion. Your existence is the true test for human self"less"ness. Existence has become a burden for most humans, your presence is the relief, you are the solace. Please bless the world that there may be a flood of humane qualities in all.
Affectionately
Krish
நீங்கள் கொடுத்த நம்பிக்கைக்கு நன்றி
நண்பா, இனிமேல் கால்வைக்குமிடத்தில் பரவலாக சிறிது மஞ்சள் தூளை கொட்டிவிட்டால் அவை வராது. ஒரு சமையல் மாஸ்டர் சொன்ன வீட்டு மருத்துவம்!
மனதுக்குக் கஷ்டமாகவும் இருக்கிறது...அதே நேரம் உங்கள் சிந்தனை உடம்பில் புது ரத்தம் பாய்ச்சுகிறது....
மனசுக்குக் வலிக்கிறது
உங்களை சந்திக்க முடியுமா?உங்களுடன் பேசமுடியுமா?
manam kanakkindrathu, enna solvathendrea theria villai. Ungaludiya aatral ungali vaalvin uyarntha nilaikku konndum sellum enbathil thuliyum santheagamillai. Nambikkai endral ennavendru ungalidamirunthu katkka vendum.
Iraivan ungalai aasirvathipparaga.
Anonymous said...
//hi im from ottawa, canada. Ive read your post and im so sorry abt it.
Recently i've lost my fingers at work.//
என்னைப் படித்ததினால் உங்களுக்கு நம்பிக்கை கூடியிருப்பதில்..,
சந்தோஷம்.
சந்தோஷம்.
சந்தோஷம்.
இழந்தவை குறித்து கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது நண்பரே?
விரல்கள் போனால் என்ன?
மீதமுள்ள உடல் நன்றாக இருக்கிறதல்லவா?
ஒரு வேளை கையே போயிருந்தால்?
மனம் திடப்படட்டும்.
இழந்தவை குறித்து துக்கப்பட்டு அழுது நம் வாழ்வை நாமே நரகமாக்கிக் கொள்ளப் போகிறோமா?
இருப்பவற்றுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லி, நமக்கு நாமே நம்பிக்கையூட்டிக் கொண்டு, ஸ்வர்க்கத்தை உருவாக்கப் போகிறோமா?
நம் வாழ்க்கையை விதி தீர்மானித்தாக சொன்னது அந்தக் காலம்.
நாம் தீர்மானிப்போம்.
நம் விதியையும்..., வாழ்க்கையையும்.
சரியா?
தமிழ்நெஞ்சம் said...
//இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்//
நன்றி தமிழ்நெஞ்சம்.
போன சுதந்திரதின வாழ்த்துக்கு, இந்த வருஷ சுதந்தர தினம் முடிஞ்சு நன்றி சொன்ன ஒரே ஆ்ள் ஞானாய்த்தன்னே இருக்கும். :-)
ராமலக்ஷ்மி said...
//நிச்சயமாய்
ஞானி
நீங்கள்தான்!//
அச்சோ..! இன்னும் அந்த நிலைக்கு நான் வரவில்லை. வெறுமனே முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
Gokulan said...
//அன்பு நண்பா.. ஆசையாய் கவிதைகள் தேடி வந்தேன்.. உங்கள் பதிவு வாசிக்க ஆரம்பித்தவுடன் மனம் வலிக்க ஆரம்பித்துவீட்டது.. முழுமையாக வாசிக்கவும் இயலவில்லை.. மன்னித்துக்கொள் நண்பா..//
உங்கள் மனம் வலிக்க வைத்த என்னைத்தான் நீங்கள் மன்னிக்க வேண்டும் நண்பா.
//புதிய சிறகுகளுடன் மகிழ்ச்சியாய் வலம் வருவீர்கள் என நம்புகிறேன்! :)//
அந்த சிறகுகளைத் தந்ததே உங்களைப் போன்ற கடவுள்கள்தானே நண்பா.
மனம் நிறைந்த நன்றிகள்.
Anonymous said...
//There are thousands of Anthonys around the world. But God sent this one "Muthu" to measure the power of human compassion. Your existence is the true test for human self"less"ness. Existence has become a burden for most humans, your presence is the relief, you are the solace. Please bless the world that there may be a flood of humane qualities in all.
Affectionately
Krish//
கடவுளே...! இப்படி ஒரு வரமளித்ததற்கு,
ஆயிரம் கோடி நன்றிகள்.
குடுகுடுப்பை said...
//நீங்கள் கொடுத்த நம்பிக்கைக்கு நன்றி//
நன்றி நண்பரே.
அடுப்புவாயன் said...
//நண்பா, இனிமேல் கால்வைக்குமிடத்தில் பரவலாக சிறிது மஞ்சள் தூளை கொட்டிவிட்டால் அவை வராது. ஒரு சமையல் மாஸ்டர் சொன்ன வீட்டு மருத்துவம்!//
நீங்கள் சொன்ன மருத்துவத்தை அக்காவிடம் சொன்னேன். உடனே உபயோகப் படுத்தினார்கள்.
நல்ல பலன் கிடைத்தது.
ஆனாலும்...
எப்போதாவது மஞ்சள் தூள் போட மறந்தால், எப்போதேனும், அவர்கள் வருவதையும், சாப்பிடுவதையும்,
இன்னமும் சந்தோஷமாய் அனுமதிக்கிறேன்.
அன்புடன் அருணா said...
//மனதுக்குக் கஷ்டமாகவும் இருக்கிறது...அதே நேரம் உங்கள் சிந்தனை உடம்பில் புது ரத்தம் பாய்ச்சுகிறது....//
அப்படியா? மிக மிக சந்தோஷம்.
ஆகீல் முசம்மில் said...
//மனசுக்குக் வலிக்கிறது//
மன்னியுங்கள் நண்பரே!
Anonymous said...
//உங்களை சந்திக்க முடியுமா?உங்களுடன் பேசமுடியுமா?//
ஓ தாராளமாக. எப்பபோது வேண்டுமானலும்.
வருமுன்னர் ஒரு தொலைபேசிவிட்டு வாருங்கள்.
Anonymous said...
//manam kanakkindrathu, enna solvathendrea theria villai. Ungaludiya aatral ungali vaalvin uyarntha nilaikku konndum sellum enbathil thuliyum santheagamillai. Nambikkai endral ennavendru ungalidamirunthu katkka vendum.
Iraivan ungalai aasirvathipparaga.//
இறைவனின் ஆசீருக்கு நன்றி நண்பரே.
Post a Comment