
நிச்சயமற்ற நிச்சயத்தில்தான் உலகம் இயங்கி வருகிறது.
நாளை என்ன ஆகும்..? அடுத்த நிமிடம் நாம் இருப்போமா..? இப்படி எதுவுமே தெரியாத நிலையில் இந்த மனிதப்பதர்கள் (என்னையும் சேர்த்துத்தான்) போடும் ஆட்டத்தை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.
எந்த நிமிடமும் எதுவும் நிகழலாம்.
வா என்று என்னதான் கூவினாலும் வராது. வந்தபின் வரமாட்டேன் என்று சொல்ல முடியாது.
மரணத்தைத்தான் சொல்கிறேன்.
உயர வேண்டுமென்ற உறுதியோடு உழை. உழைப்பு ஒன்றுதான் உயர்வுக்கு வழி.
நாளை நல்லது நிகழுமென்று நம்பிக்கையோடு எதிர்நோக்கியிரு!
ஆயினும்... தயாராயிரு!
எந்த நிமிடமும் உன் விக்கெட வீழ்த்தப்படலாம்.
ஆம்! போர்க்களத்தில் வெற்றிக்காகப் போரிடும் போர் வீரன், அனைத்துக்கும் தயாராயிருப்பான்.
தயாராயிருப்பதென்பது ஒரு கலை!
முடிந்த வரையில் பெற வேண்டியதை பெற்று விடு!
கொடுக்க வேண்டிதை கொடுத்து விடு.

நான் நிறையப் பெற்றுவிட்டேன்.
பணமாக, பொருளாக, உடலுழைப்பாக, சேவையாக, அன்பாக... இப்படிப் பல வழிகளில் பெற்றுவிட்டேன்.
கொடுப்பது....?
ஹா...?
இன்னமும் நான் யாருக்கும் எதுவும் கொடுத்ததாக நினைவில்லை? (துன்பத்தைத், தொல்லையைத் தவிர)
இப்படியே போய் விடுவேனோ எனும் பயம் எட்டிப்பார்க்கிறது.
அப்பா தான் இறந்தபின் தன் கண்களை தானம் செய்ய வேண்டுமென்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.
இறந்தது கிராமத்தில் என்பதாலும்... உறவினர்களின் விட்டேற்றித் தனத்தாலும் அவரது ஆசை நிராசையாகி விட்டது.
இறந்தபின் மண்ணுக்கோ, நெருப்புக்கோ இரையாகப்போகும் உடல்.
இன்னொரு ஜீவனுக்கு உயிர் கொடுக்கவோ (அ) பார்வையளிக்கவோ உபயோகப்பட்டால் அதை விட வேறென்ன வேண்டும் ஒரு மனிதப்பிறவிக்கு?
நான் இறந்தபின் இந்த உடைந்து போன உடலை மருத்துவத் துறை தன் ஆராய்ச்சிக்கு உபயோகித்துக் கொள்ளட்டும்.
உபயோகப் படுபவற்றை எடுத்து பிற மனிதருக்குப் பொருத்தட்டும்.
இதற்காக ஒப்புதல் அளிக்க இப்போது நான் யாரை அணுக வேண்டும்?
விபரம் தெரிந்த அன்பர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிக்கவும்.
என்னைப் போல இன்னும் பலர் கொடுக்க நினைத்து விபரம் தெரியாமல் இருக்கலாம்.
அவர்களுக்கும் உபயோகப்படட்டும்.

7 comments:
/இன்னொரு ஜீவனுக்கு உயிர் கொடுக்கவோ (அ) பார்வையளிக்கவோ உபயோகப்பட்டால் அதை விட வேறென்ன வேண்டும் ஒரு மனிதப்பிறவிக்கு?/
நேர்மையான சிந்தனை.
டாக்டர் புருனோ அல்லது அண்ணன் அப்துல்லா உதவலாம், கேட்டு சொல்கிறேன் தல!
// வால்பையன் said...
டாக்டர் புருனோ அல்லது அண்ணன் அப்துல்லா உதவலாம், கேட்டு சொல்கிறேன் தல!//
நன்றி நண்பரே!
//அன்புடன் அருணா said...
நேர்மையான சிந்தனை.//
நேர்மையான பின்னூட்டம். :-)
என்னை மிகவும் நெகிழ வைத்த பதிவாக உங்களுடைய சுய விவரம் மற்றும் பதிவுகளைப் பார்க்கிறேன்.
எனக்கு மிகவும் நெருங்கிய நட்புவட்டமாக இருக்கும் ஒரு குடும்பத்தில், மூன்று பேருக்கு மயோபதி என்ற நோயால், (ஏறத்தாழ போலியோவினால் தாக்கப் பட்டதுபோல கால்களில் இருந்து படிப்படியாக மேலே கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து வரும் ஒருவகை வியாதி, மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்றும் சொல்வார்கள்) பாதிக்கப் பட்டு, அதே நேரம் உங்களை மாதிரியே தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வதை நேரடியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
தன்னம்பிக்கை, பாசிடிவாகச்சிந்திப்பது என்ற வடிவத்தில் தற்சமயம் வெளிப்படும் இறைவனது கருணை பூரணமாக என்றைக்கும் உங்களோடு இருக்கட்டும்.
உடலை, உடல் உறுப்புக்களைத் தானமாகக் கொடுப்பதற்கு அருகில் உள்ள அரசு மருத்துவ மனையை அணுகினாலேயே விவரங்கள் சொல்வார்கள். கண்தானத்திற்குத் தனியாகவும், மற்றவற்றிற்குத் தனியாகவும் கொடுக்க வேண்டும். இறப்பை உடனடியாகத் தெரியப் படுத்தினால், ஆகவேண்டியதை, தானமாகப் பெற்ற அமைப்பே பார்த்துக் கொள்ளும்.
நல்ல எண்ணம் முத்து. மனமார்ந்த வாழ்த்துகள்.
கிருஷ்ணமூர்த்தி சார் சொன்னதுபோல, அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகவும்.
அல்லது அரசு மருத்துவரான, வலைப்பதிவாளர் திரு. புருனோவை அணுகவும். அதற்குமுன் உங்கள் குடும்பத்தினரிடம் அனுமதி பெறுவதும் அவசியம் என்றெண்ணுகிறேன்.
அவரின் இந்தப் பதிவைப் பாருங்கள்:
http://www.payanangal.in/2008/09/blog-post_21.html
நன்றி.
Post a Comment