
என் இனிய கர்ணா...!
என்னவோ தெரியவில்லை... இன்று நாள் முழுக்க உன் நினைப்புத்தான்.
எல்லோருக்கும்... "கர்ணன்" என்றால் கொடை வள்ளல்.
வேண்டும் என்று வருகிறவர்களுக்கெல்லாம், வாரி வாரி வழங்கினவன்,
சிறந்த வீரன், க்ஷத்திரியன் என்பதுதான் தெரியும்.
ஆனால்...
நீ ஏன் கொடுத்தாய்...?
கொடுக்கும் மனம் உனக்கு எதனால் வந்தது..?
என யாரும் சிந்தித்து இருக்க மாட்டார்கள்.
ஆமாம்...
நீ ஏன் கொடுத்தாய்?
ஏனெனில்...
நீயும் என்னைப் போலவே...
துன்பங்களையும்... துயரங்களையும்.. மட்டுமே
வாழ்வில் சந்தித்தவன்.
பிறந்த உடனே...
தாய் ஆற்றில் விட்டு விட்டாள்.
என்னதான் குதிரைக்கார அப்பா...
உன்மீது பாசத்தைப் பொழிந்தாலும்...
பல முறை பலரால் அவமானப்
படுத்தப் பட்டவன் நீ.
குறிப்பாக உன் தம்பி அர்ச்சுனனாலேயே....
அப்பன் பேர் தெரியாதவன்...
குதிரைக்காரன் மகன்...
இழிபிறவி...
என்றெல்லாம்...
உன் பூ மனம்...
பல முறைக்
கொலை செய்யப் பட்டிருக்கிறது.
என் தங்கமே...
எப்படியெல்லாம் நீ துடித்திருப்பாய் என்பதை...
எண்ணிப் பார்த்தால்....
என் இதயம் சுக்கு நூறாகக் கிழிகிறதடா...
நண்பா...!
என் கண்கள் உன்னைப்
போலவே...
வள்ளலாகிச் சுரக்கிறது.
வரங்களுக்குப் பஞ்சமில்லைதான்.
தெய்வாம்சம் பொருந்தியவன்தான்.
ஆனால்...
எதுவுமே...
உன் காயங்களிலிலிருந்தோ,
மரணப்படுவதில் இருந்தோ...
உன்னைக் காப்பாற்றப் பயன்படவில்லையே.
இது போக மனைவியும் தன் பங்குக்கு...
விதியோடு சேர்ந்து உன்னைப்
பந்தாடிப்... பந்தாடிப்...
பரிதவிக்க விட்டாளே....
சுத்த வீரனான நீ...
அந்த பகவானாகிய கிருஷ்ணன் உட்பட
அனைவராலும்,
ஏன்... சாகும் நேரத்தில் கூட...
முதுகில் குத்தப் பட்டவன்.
ஆரம்பம் முதலே...
விதியால் வஞ்சிக்கப் பட்டவன் நீ...!
அதனாலேயேதான் நீ...
கொடுத்தாய்...
உனக்கு விரக்தி...
உலகின் மேல்...
வாழ்வின் மேல்...
கொடுப்பதன் மூலம்...
அந்தப் பொல்லாத விதியையே...
தோற்கடித்தவன் நீ!
ஒவ்வொரு முறை நீ கொடுக்கும்போதும்...
விதியைப் பார்த்து நீ ஏளனமாய்ச் சிரித்தாய்!
ஏ விதியே...!
நீ என்ன என்னிடமிருந்து பறிப்பது...?
இதோ நானே உனக்குத் தருகிறேன்.
இந்தா..
வைத்துக்கொள்...
வைத்துக்கொள்...
ஒன்றை மட்டும்...
நினைவில் கொள்...!
எனக்கு விரக்தி
கூடக்... கூட...
உனக்கு அபஜெயம்தான்...!
என்று எக்களிப்பாய்ச் சிரித்தபடி...
கேட்டவர்க்கெல்லாம்...
கடைசியாய்த்
தேர்த்தட்டில் விழுந்து கிடக்கையிலும் கூட...
வாரி வாரி வழங்கினாய்.
கொடுத்ததன் மூலம்...
உன் மனக்காயங்களுக்கு
மருந்திட முயற்சி செய்தாய்... போலும்!
கொடுத்துக் கொடுத்தே..
உன் கைகள்
சிவந்து கன்றிப் போயிருக்குமாம்...!
அந்தக் கொடுப்பதில் கூட...
உனக்கென்று ஒரு கொள்கை வைத்திருந்தாயாம்.
உன் கைகள் கீழ் இருக்க...
பெறுபவர் கைகள் மேல் இருந்து...
தேவையானதை எடுத்துக் கொள்ளச் செய்தவன் நீ...!
கொடுக்கிறோம் என்கிற ஆணவம்
வரக் கூடாது என்பதற்காக...
உன்னையே தாழ்த்திக் கொள்ள நீ செய்த...
ஏற்பாடு இது.
ஒரு சம்பவம் ஒன்று...
நினைவுக்க்கு வருகிறது... நண்பா...!
யாசித்தவர்களுக்கெல்லாம்...
கொடுப்பதற்காக மட்டுமே...
நீளும்
கர்ணனின் கை...
ஒரே ஒரு முறை...
பெறுவதற்காக நீண்டது.
ஒரு முறை ஆற்றிலே குளித்துவிட்டுக்
நீ கரையேறிக் கொண்டிருந்த நேரம்.
இடுப்பில் அரைத்துணியைத் தவிர...
வேறெதுவும் இல்லாத அந்த நேரம் பார்த்தா...
ஒரு ஏழை...
உன்னிடம்... கையேந்த வேண்டும்.
இந்த நொடி...
கொடுக்க எதுவுமில்லையே என...
எப்படித் துடித்துப் போனாய்...?
சற்றுக் கழித்தென்றால்...
சகலமும் உன்னால் தர முடியும்.
ஆனால்...
உனக்கோ...
அப்போதே...
அந்த வினாடியே...
கொடுத்தாக வேண்டும்...
என்ன செய்வேன்...?
என்ன செய்வேன்..?
என மனம் அலற...
அங்குமிங்கும் உன் கண்கள்
அலை பாய்ந்தது.
நன்றி இறைவா...!
அதோ அர்ச்சுனன்..!
அவனோ உன் அளவில்...
பகைவன்!
உன்னை அவமானப் படுத்தியவன்.
கேவலப் படுத்தியவன்.
அப்போதைக்கு...
அதெல்லாம் உனக்கு நினைவில்லை.
கேட்ட வறியவருக்கு,
ஏதாகிலும் தர வேண்டுமே என்ற...
ஒரே குறிக்கோள்தான் உன்னிடம்.
அர்ச்சுனன் முன்னால் அப்படியே மண்டியிட்டாய்.
"'அர்ஜுனா'! யாசகம்...
ஏதாவது கொடு...!"
என்று கையேந்திக் கேட்கிறாய்.
க்ஷத்திரியர்களுக்கென்று
ஒரு குணம் உண்டு.
எதிரி பணிகிறான் என்றால்...
உருகிப் போவார்கள்.
அர்ச்சுனனும் அப்படித்தான்...
உருகிவிட்டான்.
தன் தலையில் சூடியிருந்த....
வைர கிரீடத்தைக் கழற்றி...
உன் கையில் வைக்கிறான்...
உடனே அடுத்த வினாடியே...
அதை அந்த வறியவருக்கு
ஈந்து...
அவரது சந்தோஷ முகம் கண்ட பிறகுதான் உனக்கு...
சற்றே நிம்மதி நண்பா...!
மனமும்...
கண்களும்...
நன்றியில் தழதழக்க..
வார்த்தைகளற்று...
நீ அர்ச்சுனனை நோக்க...
சந்தோஷ இறுமாப்புடன்...
அப்பால் செல்கிறான் அவன்.
அன்றைக்கு உனக்கு அர்ச்சுனன் ஈந்த கிரீடத்தினால்தான் பின்னாளில் அவன் உயிர் காக்கப் பட்டது.
ஆம்.
குருக்ஷேத்திரம்.
நீ அர்ச்சுனின் கழுத்துக்குக் குறி வைத்து பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறாய்.
அனைத்தும் அறிந்த பார்த்தசாரதி, கால் கட்டைவிரலால் தேரை அழுத்துகிறான்.
தேர் மண்ணில் புதைகிறது.
கழுத்தை நோக்கி வந்த அஸ்திரம், அர்ச்சுனனின்
கிரீடத்தைக் கொண்டு போயிற்று.
(தலைக்கு வந்தது தலைப்பாகையோடு....?)
அர்ச்சுனன் செய்த தர்மம் அவனது தலை (உயிர்) காத்தது.
நீயோ தர்மமாக உன் உயிரையே அல்லவா கொடுத்தாய்...
அதுவும் அந்தக் கடவுள் கிருஷ்ணனுக்கே கொடுத்துப் பூரித்தாயே.
எதுவும் நிரந்தரமில்லை என்பதைப் பூரணமாக உணர்ந்தவன் நீ.
உணர்த்தியவன் நீ.
பிறருக்குத் தரவேண்டும் என நினைத்துவிட்டால்...
பிக்ஷை எடுத்தாவது தரலாம் என எனக்கு
உபதேசித்தவன் நீ நண்பா!
நீ நிஜமாகவே இருந்தாயா? அல்லது உன் சம்பந்தப் பட்டவையெல்லாம் கட்டுக் கதைகளா...?
என்கிற கேள்விகள் எல்லாம் எனக்குத் தேவையில்லை.
என் வரையில் நீ உண்மை.
உன்னில்... உன் வேதனைகளில் நான் என்னையே உணர்ந்திருக்கிறேன் பல முறை.
நண்பா..!
இன்றும் கூட நான் உன்னைப் போலப் பல கர்ணர்களை வாழ்வில் சந்தித்திக்கத் துவங்கியிருக்கிறேன்.
எனக்கு தங்களின் முகம் காட்டாமல், முகம்காட்டி, உதவி செய்த, உதவி செய்து கொண்டிருக்கிற, உதவ நினைக்கிற அனைத்து அன்பு உள்ளங்களிலும்....
களங்கமற்ற கர்ணனைத்தான், கர்ணனாகிவிட்ட கடவுளைத்தான்...
நான் நேரிடையாகக் காண்கிறேன்.
ஓ...! கர்ணா...!
என் மானசீக நண்பா...!
உன்னிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்க நினைக்கிறேன்.
தருவாயா?
அனைவருக்கும் கொடுத்த நீ உன் நண்பனுக்குத் தரமாட்டாயா... என்ன?
நிச்சயம் தருவாய்.
என்னையும் உன்னைப் போல் கொடுக்கும் நிலைக்கு உயர்த்துவாயா?
நானும் உன்னைப் போலவே...
வருகிறவர்க்கெல்லாம்...
வாரி வாரி வழங்க வேண்டும்.
நானும் உன்னைப் போலவே கொடுத்துக் கொண்டே சாக வேண்டும்.
கொடுத்தே பழக்கப் பட்ட உனக்கு...
வாங்குவதில் உள்ள வலியும் வேதனையும்,
புரியுமா தெரியவில்லை?
துரியோதனனுக்கு அடுத்தபடியாக...
உன்னை நண்பனாக வரித்திருக்கும் இந்த ஏழையின் துக்கம் உனக்குப் புரியாமலா போகும்.?
ஒவ்வொரு முறைப் பெறும்போதும் என் உள்ளம்...
ஒராயிரம் முறை காயப் படுகிறது.
என் இல்லாமையும், இயலாமையும்...
மட்டும் எனக்கு ஏற்படாமல் போயிருந்தால்..,.
இந்தக் காயங்களும் எனக்கு இல்லாமல் போயிருக்கும்.
என் மீது கருணை கூர்ந்து...
எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும்
கர்ணர்களுக்கு...
கடவுள்களுக்கு...
இங்கே எனது கண்ணீர் கலந்த நன்றிகளைத்
தெரிவிக்கிறேன்.
இன்றைக்குப் பெறுகிறேன்.
என்றாவதுத் திருப்பிக் கொடுப்பேன்...
என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்...
என் சுயமரியாதையைச் சமாதானப் படுத்திக் கொள்கிறேன்.
பெறுகிற இடத்திலேயேதான் திருப்பித் தரவேண்டுமென்பதில்லை நண்பா.
நாளை என்போல் இன்னொரு,
இல்லாதவருக்கு, இயலாதவருக்கு நான் தர வேண்டும்.
அப்படித் தரும்போது....
அவர்களின் சுயமரியாதை உள்ளம் காயப் படாதா?
என்றுதானே கேட்க வருகிறாய்.
இது தவிர்க்க இயலாத சங்கிலித் தொடர்.
எப்போது இல்லாமையும், இயலாமையும்...
இல்லாமல் போகிறதோ...
அப்போது இந்தச் சங்கிலித் தொடர் துண்டிக்கப் படும்.
என்ன...?
சரிதானே..?
|
15 comments:
//பெறுகிற இடத்திலேயேதான் திருப்பித் தரவேண்டுமென்பதில்லை நண்பா.
நாளை என்போல் இன்னொரு,
இல்லாதவருக்கு, இயலாதவருக்கு நான் தர வேண்டும்.//
கர்ணன் உனக்குக் கொடுத்துள்ள உன் கொடுக்க வேண்டும் என்ற மனதைக் கொடு!
வேறென்ன கொடுத்தாலும் நிறையப் போவதில்லை!
//எப்போது இல்லாமையும், இயலாமையும்...
இல்லாமல் போகிறதோ...
அப்போது இந்தச் சங்கிலித் தொடர் துண்டிக்கப் படும்.//
இந்தச் சங்கிலிதான் நல்லவர்களை கடவுளுடன் இணைப்பது....அதனால் தொடருட்டுமே இந்த சங்கிலித் தொடர்....
அன்புடன் அருணா
குறைந்த வரிகள்
கொதிக்கும் வலிகளை
சொன்னால் உன்னை
நல்ல கவிஞன் என்பார்கள்
நீ கர்ணனா
இல்லை
கர்ணனுக்கே
தானம் கொடுக்க
மனமுடையோன்
நீ
வாழ்க
இனிவரும்
காலம் கனிந்து மகிழந்து
பாசமுடன்
என் சுரேஷ்
அன்பு அந்தோணி,
நான் சமீப காலத்தில் வாசித்தவற்றில் என் மனதை நெகிழ வைத்த வரிகள் இப்பதிவில் தான் உள்ளன.
//இன்றைக்குப் பெறுகிறேன்.
என்றாவதுத் திருப்பிக் கொடுப்பேன்...
என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்...
என் சுயமரியாதையைச் சமாதானப் படுத்திக் கொள்கிறேன்.
பெறுகிற இடத்திலேயேதான் திருப்பித் தரவேண்டுமென்பதில்லை நண்பா.
நாளை என்போல் இன்னொரு,
இல்லாதவருக்கு, இயலாதவருக்கு நான் தர வேண்டும்.
அப்படித் தரும்போது....
அவர்களின் சுயமரியாதை உள்ளம் காயப் படாதா?
என்றுதானே கேட்க வருகிறாய்.
இது தவிர்க்க இயலாத சங்கிலித் தொடர்.
எப்போது இல்லாமையும், இயலாமையும்...
இல்லாமல் போகிறதோ...
அப்போது இந்தச் சங்கிலித் தொடர் துண்டிக்கப் படும்.
என்ன...?
சரிதானே..?
//
அழகான புதுக்கவிதைக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும், தொடர்ந்து எழுதுங்கள் !
என்றென்றும் அன்புடன்
பாலா
எழுத்து அருமை.
உணர்வுகளின் வெளிப்பாடு மிக உண்மையானதாய் இருப்பதை உணர முடிகிறது அந்தோணி.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.
அருமை நண்ப, அந்தோனி, கவலை வேண்டாம். கடவுளின் குழந்தைகள் கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் வாழ்க்கைதான் நாம் வாழ்வது. பிறப்பிலிருந்து இறப்பு வரை இன்பம் அல்லது துன்பம் மட்டுமே இருந்ததாக வரலாறு கிடையாது. காலம் மாறும். கொடுக்கும் காலம் விரைவில் வர, ஆண்டவனின் கருணை உன் மீது பாய, எல்லாம் வல்ல அவனைப் பிரார்த்திக்கிறேன்.
அருமையான பதிவு. மனவலி தெரிகிறது. மனந்தளரேல். நல்வாழ்த்துகள்.
a "top-class" expression of emotions! waaw! as a corollary, it goes without me saying "you are a top-class poet".
do write more and more lengthy poems like these, depicting emotional "positivism".
"நம்பிக்கை அந்தோணி" இப்படி அழலாமா? வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும், நேர்மறைச் சிந்தனைகளுக்கும், அனைத்துக்கும் மேல் உங்கள் அருமைச் சகோதரிக்கும்!
nanmba ... nalamudan vazha vazhthukkal..
nandri andha muham theriyaadha engal mootha sahoedharikku..ungal karnan mudhalil avardhaan. avaraipoendra yethanayoe uravuhal nam thamizh kudumbangalil endhavidhamaana edhirpaarpuhalum indri uzhaithukkondaedhaan irukkiraarhal
vaazhha valamudan...
about post a comment ... sure, an impressive article .. a suitable song .. I love that Karnan song with Sirkazi voice..
krk
தங்கள் அறிமுகமே எனக்கு வாழ்வின் அதியற்புதப் பரிசு. keyboard with pitch bender-தங்களுக்குச் சொந்தமாகவும், திரைத்துறையிலும் தாங்கள் சுடர்விடவும் இறையருளை வேண்டுகின்றேன்
-ச,இரமசாமி 01,நவம்பர்,2009
கர்ணனைப் பற்றிய அற்புதமான கட்டுரை..
கொடுக்கும் மனம் உள்ளவர்கள் அனைவரும் இறைவனுக்கு சமமானவர்களே..
எல்லோருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் உங்களுக்கு இறைவன் சகல நலன்களையும் அருள்வார்.
very nice one ,vaazhha valamudan
shekhar
kuwait
//என் கண்கள் உன்னைப்
போலவே...
வள்ளலாகிச் சுரக்கிறது.
இந்த வரிகள் ரொம்பவும் பிடிக்கிறது
தர்மம் தலை காக்கும் --அர்ச்சுனன் உதாரணம் சிறப்பாய் உள்ளது
ஒருகதை -பல கருத்து -ஒரு உள்ள குமுறல் அத்தனையும் ஒரு கவியில் கொண்டுவந்து விட்டீர்கள்
Post a Comment