
கடவுளே நீர்தான் வாழும் உயிர்களனைத்திற்கும் தந்தை.
எனவே உம்மை அப்பா என்றே அழைக்கிறேன்.
அன்புள்ள அப்பா,
இந்த பூமியிலும், அதைத் தாண்டி அண்டம்,
பேரண்டத்தை தாண்டின பெரு வெளியெங்கும்...,
ஒவ்வொரு துகளின்...,
ஒவ்வொரு அணுவினுள்ளும்...
நீர் முழுமையாக நிறைந்திருக்கிறீர் என்பதை உணர்கிறேன்.
துன்பப்படுகிறவர்களுக்கு அடைக்கலமும், ஆறுதலும், நீர் மட்டுமே.
எனது முந்தைய கடிதத்திற்கு நீர், மிகவும் அற்புதமாக பதிலளித்தீர்.
இப்போது மீண்டும் என் ஆன்மாவின் வலிகளை, வேதனைகளை,
தேவைகளை, தீர்க்கும் சந்தோஷ எதிர்பார்ப்புக்களோடு...
மீண்டும் வெகுவாய் யோசித்த பிறகு,
இதோ உமக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
என் முதல் தேவை.
என் அத்தனை தேவைகளிலும் இது மிக மிக முக்கியமானது.
1) நான் இந்த உலகத்திற்கு, என்னிடமிருப்பதை முழுமையாக கொடுக்க விரும்புகிறேன்.
என் இறுதி மூச்சு வரையிலும்...சாகும்போதும், நான் கொடுத்துக் கொண்டே சாக வேண்டும்.
அந்த வகையில் என்னிடம் இப்பொது அளவில்லாமல் கொட்டிக் கிடப்பது...
1)சுய நம்பிக்கை.
2)வாழ்வில் வெற்றியடைவது குறித்து கடந்த 15 வருடங்களாக நான் தேடித்தேடிப் படித்த,
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள்.
எனக்குக் கிடைத்ததை...
என்னிடம் இருப்பதை இந்த உலகத்திற்கும், சமுதாயத்துக்கும், அள்ளி அள்ளி வழங்க வேண்டும்.
மேடைகளில் மெல்லிய நகைச்சுவை இழையோடு கலந்து, எனது சுய நம்பிக்கையையும்...., நான் படித்த வாழ்க்கை வெற்றி முறைகளையும்..,
கொடுப்பதில் நான் முன்பே வெற்றி பெற்றிருக்கிறேன்.
இதை மேலும் மேலும் தொடர்ந்து...,
ஒவ்வொரு பள்ளி மேடைகளிலும்,
கல்லூரி மேடைகளிலும்,
விழா மேடைகளிலும்...,
கடல் கடந்து உலகமெங்கும் கொடுக்க விரும்புகிறேன்.
இரண்டாவது தேவை
2) எனக்கு உயிர் கொடுத்து, இந்த பூமியில் தவழ விட்டு, வளர்த்து, நான் இப்படியான பிறகு எனக்காக ஒவ்வொரு நாளும் கண்ணீர் சிந்திய என் தாய்...,
இன்று கவனிக்க யாருமற்று பல வருடங்களாய்ப் படுக்கையில்...
வயதான அண்ணன் அண்ணியோ, மற்ற சகோதரிகளோ, கவனித்துக் கொள்ள முடியாத நிலையில்,
தினமும் "இறைவா எனக்கு சீக்கிரம் மரணத்தைக் கொடு" எனக் கெஞ்சியழும் என் தாயை,
என்னருகில் வைத்து அவர்களுக்கென்று ஒரு அன்பான நர்ஸ் ஒருவரை நியமித்து,
அவர்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மகனாக என் தாய்க்கும் தந்தைக்கும், அவர்களின் அந்திமக் காலத்திலாவது,
அவர்களின் அனைத்துத் தேவைகளையும், நிறைவேற்றக் கனவு கண்டிருந்தேன்.
அந்தக் கனவின் ஒருபாதியை சிதலமாக்கிவிட்டு என் தந்தை, ஒன்றரை வருடம் முன்பு மிகுந்த துயரத்தோடு உயிர் நீத்தார்.
குறைந்த பட்சம் என் தாயின் இறுதிக் காலமாவது அமைதியுடனும், நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் செல்லவேண்டும்.
இதைச் செய்ய எனக்கு வழி காட்டும்.
மூன்றாவது தேவை.
3) பத்தடிக்கு ஐந்தடியிலான இந்த அறை இப்போது தாங்க முடியாமல் மூச்சு முட்டுகிறது.
இதுகாறும் எப்படியோ தாங்கிவிட்டேன். இனிமேலும் என் இறுதி மூச்சு வரையிலும் இங்கேயே இருக்க நான் தயார்.
ஆயினும், இங்கே நான் படும் சிரமங்களையும், துன்பங்களையும் உம்மால் அகற்ற முடியும். என் தேவை இன்னும் பெரியதாக ஒரு ஒற்றை அறை.
நான்காவது தேவை.
4) என் வாழும் தெய்வாமான, 50 வயதை எட்டும் என் அக்காவினால் முன்போல் எனக்கு சேவை செய்ய முடியவில்லை.
"இது வரையிலும் உன்னைச் சுமந்தேன்...
இனிமேல் சுமக்க எனக்குச் சக்தி இல்லையடா மகனே!" என்று என ஒவ்வொரு நாளும், அவர்கள் மனதுக்குள்ளேயே அழும் குரலை நான் தினமும் கேட்கிறேன்.
இந்த வயதிலும்..., ஒரு சிறு முகச்சுளிப்பின்றி அவர்கள் எனக்காக படும் துன்பம் என்னால் சகிக்க முடியவில்லை.
அவர்கள் தோளில் இருந்து என் சுமையை இப்போதாவது எடுத்து விடும்.
இதுவரையில் அவர்கள் என்னைச் சுமந்ததற்கு இனி காலமெல்லாம், அவர்களை என் கண்ணுக்குள் வைத்து காக்க வேண்டும்.
இந்த நிலையில் என் தேவை...
என் சக போராளிகள், வாய் ஓவியர் இளங்கோவனுக்கு இருப்பது போன்றும், என் அன்புக்குரிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ்-ற்கு இருப்பது போலவும், என்னை கவனித்துக் கொள்ளவென்று ஒரு நர்ஸ் குழு.
அப்பா....
என் முதல் தேவையைத் தவிர மற்ற அனைத்துத் தேவைகளும் நிறைவேற எனக்கு நிறைய பணம் வேண்டியிருக்கிறது.
அதை எவரிடமும் இலவசமாகப் பெற என் சுயமரியாதை ஒருநாளும் சம்மதிக்காதென்பது உமக்குத் தெரியும்.
(வேறு வழியின்றி.... இது வரையிலும் பெற்றதே இன்னமும் வலிக்கிறது. நான் பிறருக்குக் கொடுக்க நினைப்பது இந்த வலி தீர்ப்பதற்கான ஒரு சிறு வழி முறை.)
ஒரே வழி நான் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும்.
எனது இப்போதைய சம்பளமான 3500 ரூபாய்... எனது சாப்பாட்டிற்கும்,
மருத்துவச் செலவுகளுக்குமே சரியாக இருக்கிறது.
இருப்பினும் இந்த மட்டுமாவது, சுய மரியாதையுடன் நானே என் தேவைகளுக்குச் சம்பாதிக்க வழி செய்தமைக்கு உமக்கு என் கண்ணீர் கலந்த நன்றிகள்.
இது வரையிலும் என் தேவைகளைச் சந்திக்க உதவி செய்த நீர் இனிமேலும்... உதவுவீர்...
இன்னும் சம்பாதிக்க வழிகாட்டுவீர் என மிக மிக ஆழமாக உறுதியிலும் உறுதியாக நம்புகிறேன்.
என் தேவைகளை உம்மிடம் மட்டுமே கேட்க எனக்கு உரிமை இருப்பதாக நான் நம்புகிறேன்.
இதை எப்படித் தரப் போகிறீர், எந்த விதத்தில் என்னை நிறைவுறச் செய்யப் போகிறீர் என்பது எனக்குத் தெரியாது.
ஆனால்.... செய்வீர் எனபதை மட்டும் நம்புகிறேன்.
நான் உம்முடைய செல்லப் பிள்ளை எனதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டும்.
இப்படிக்கு
உம்மால் அதிகமாய் நேசிக்கப்படும் மகன்
அந்தோணி முத்து
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
No comments:
Post a Comment